கிரெடிட் கார்டை இணைத்து யுபிஐ பரிவர்த்தனை.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்!
கூகுள் பே செயலியில் ரூபே கிரெடிட் கார்டை (RuPay Credit Card) அடிப்படையாகக் கொண்ட யுபிஐ சேவையை வழங்க NPCI-யுடன் கைகோர்த்திருக்கிறது கூகுள். இந்தப் புதிய வசதியின் மூலம் ரூபே கிரெடிட் கார்டை உங்களுடைய கூகுள் பே செயலியுடன் இணைத்து விட்டு அதனைப் பயன்படுத்தி வழக்கம் போல பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். தற்போது ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகிய வங்கிகளின் ரூபே கிரெடிட் கார்டுகளைக் மட்டும் கூகுள் பே செயலியில் இணைத்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
கிரெடிட் கார்டுகளைக் கொண்டு யுபிஐ பரிவர்த்தனை:
இது வரை வங்கி கணக்கு அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றை மட்டுமே யுபிஐ செயலிகளுடன் இணைத்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிந்தது. தற்போது முதன் முறையாக கிரெடிட் கார்டுகளைக் கொண்டு யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் புதிய வசதியைக் கொண்டு வந்திருக்கிறது கூகுள் பே. எனினும், ரூபே கிரெடிட் கார்டுகளை மட்டுமே தற்போது கூகுள் பே செயலியுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும், விசா அல்லது மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளை இணைத்துப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இனி வரும் நாட்களில் பிற வங்கிகள் மற்றும் பிற கிரெடிட் கார்டு சேவைகளையும் தங்கள் செயலியில் இணைத்துப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் சேவையை விரிவுபடுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.