அமெரிக்காவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட போட்டோஸ் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்
அமெரிக்காவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'போட்டோஸ்' (Photos) செயலியை பொதுப்பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வெளியிட்டு வருகிறது கூகுள். இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட செயலியில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது கூகுள். புதிய செயலியில் கூகுள் போட்டோஸ் லோகோவானது இடது பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, வலது பக்கத்தில் ஷேரிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் குறித்த தகவல்களைப் பெறுவதற்கான தேர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. முன்னர் இருந்த (தற்போது நாம் பயன்படுத்தி வரும்) செயலியில் ஷேரிங் தேர்வானது, கீழே இருக்கும் பட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது அந்த இடத்தில் 'மெமரீஸ்' தேர்வை மாற்றியமைத்திருக்கிறது கூகுள்.
பிற மாற்றங்கள் மற்றும் பிற நாட்டு வெளியீடு எப்போது?
மேலும், மெமரீஸ் வசதியை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தியிருக்கிறது கூகுள். இதன் மூலம், ஒரு ஆல்பம் போல மெமரீஸ் பகுதியில் இருக்கும் நம்முடைய புகைப்படங்களை நமக்குக் காட்டுகிறது பேட்டோஸ் செயலி. மேலும், ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட இடத்தில் நாம் படம்பிடித்த புகைப்படங்களை தாமாகவே ஒன்றினைத்து ஒரு ஆல்பமாக நமக்குக் காட்டுகிறது. இந்தப் புதிய செயலியை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்த அமெரிக்காவில் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டும் வெளியிட்டு வந்திருக்கிறது கூகுள். ஆனால், தற்போது தான் பொதுப் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவில் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் பிற நாடுகளிலும் இந்தப் புதிய செயலியை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.