குரோமில் ஜெமினி AI வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்; எப்படி பயன்படுத்துவது?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலும் குரோம் உலாவியில் ஜெமினி AI வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது கூகுள். முன்னதாக இந்த அம்சம், அமெரிக்கா உட்பட சில நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை இந்தியாவிற்கும் விரிவாக்கம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜெமினி AI-யை தனியொரு சாட்பாட்டாக மட்டுமில்லாமல் நம்முடைய கூகுள் தேடல்களிலும் பல்வேறு வகைகளில் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதை கீழே நாம் சுருக்கமாகப் பார்க்கலாம்.
கூகுள்
கூகுள் குரோமில் ஜெமினி AI
முன்னதாக இந்த வசதி காமெட் AI உலாவியிலேயே காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூகுளும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நம்முடைய தேடல் பக்கத்திலேயே மேலே ஜெமினி AI என்ற சிறிய பட்டன் ஒன்று தெரியும். அதனைக் கிளிக் செய்தால் வலது பக்கத்தில் சிறிய பேனலாக ஜெமினி AI தோன்றும். நம்முடைய தேடல் பக்கம் குறித்த எந்தவொரு தகவலையும் அந்த சிறிய டேபில் ஜெமினி AI-யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மேலும், அதிலேயே நம்முடைய தேடல் பக்கத்தில் இருக்கும் படங்களையும் எடிட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் தகவல்களை தேடுவதற்காக அல்லது சரிபார்ப்பதற்காக தனியே ஜெமினி AI பக்கத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
AI
அனைவரும் பயன்படுத்த முடியுமா?
தற்போதைய நிலையில் கூகுள் தெரிவித்திருப்பதன்படி, ஜெமினி AI ப்ரோ அல்லது அல்ட்ரா சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே தற்போது இந்த வசதியை அறிமுகம் செய்கிறது. நீங்கள் தற்போது ஜெமினி AI-க்கு சப்ஸ்கிரைப் செய்திருக்கிறீர்கள் என்றால் உடனடியாக இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால் கவலை வேண்டாம். இந்தியாவில் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் ஜெமினி AI ப்ரோ சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாகவே வழங்குகிறது கூகுள். MyJio செயலியில் சென்று இதனை வாடிக்கையாளர்கள் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். எனவே கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தப் புதிய வசதியினை இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து பயனாளர்களுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.