தேடுபொறியிலும் எமோஜி 'கிட்சன் வசதியை' அறிமுகப்படுத்தியது கூகுள்
தினசரி வாட்ஸ்அப் சாட்களில் நாம் அனைவரும் அதிகம் எமோஜிக்களைப் பயன்படுத்தியிருப்போம். உணர்வுகளை ஒற்றைப் புள்ளியில் வெளிப்படுத்த எமோஜிக்கள் உதவுகின்றன. அப்படியான எமோஜிகள் இரண்டை, ஒன்றாக இணைத்துப் புதிய எமோஜியை உருவாக்கிப் பயன்படுத்த முடிந்தால்? அப்படியான ஒரு வசதியை இதுவரை, கூகுள் தங்களுடைய கூகுள் கீபோர்டு செயலியில் அளித்து வந்தது. கூகுள் கீபோர்டைப் பயன்படுத்துபவர்களால் எந்த இரு எமோஜிக்களையும் ஒன்றாக இணைத்து, புதிய எமோஜியை உருவாக்கி, அனைத்து தளங்களிலும் அதனைப் பயன்படுத்த முடிந்தது. தற்போது அதே வசதியை தங்களுடைய வலைத்தளத்திலும், தேடல் வடிவில் கொண்டு வந்திருக்கிறது கூகுள். 'எமோஜி கிட்சன்' என அழைக்கப்படும் இந்த வசதியை எந்த சாதனத்திலும் இனி பயன்படுத்த முடியும்.
'எமோஜி கிட்சன்' வசகியைப் பயன்படுத்துவது எப்படி?
மொபைல், கணினி மற்றும் டேப் என எந்த சாதனமாக இருந்தாலும், அதிலுள்ள தேடுபொறியில் கூகுள் தேடல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். தேடல்கள் பெட்டகத்தில், எமோஜி கிட்சன் (Emoji Kitchen) என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடல் முடிவைச் சொடுக்க வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் முதல் முடிவாக 'Get Cooking' என்ற தேர்வைச் சொடுக்கினால் போதும், எமோஜி கிட்சன் தயார். இதில், நாம் விரும்பும் ஏதாவது இரண்டு எமோஜியைத் தேர்வு செய்தால், அவையிரண்டும் இணைந்த புதிய எமோஜி ஒன்றை கூகுள் நமக்கு உருவாக்கிக் கொடுக்கும். அந்த எமோஜிக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நகல் தேர்வினைச் சொடுக்கி, அதனை நாம் விரும்பும் இடத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.