தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதைக் குறைக்க கூகுள் புதிய நடவடிக்கை
கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் அதிகப்படியான தேவையில்லாத மற்றும் சம்பந்தமில்லாத மின்னஞ்சல்களால் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் அனைவருமே அவதிப்பட்டிருப்போம். தேவையில்லாத மின்னஞ்சல்களுக்கு மத்தியில், நமக்குத் தேவையான மின்னஞ்சலைக் கூட சில நேரங்களில் தவற விட்டிருப்போம். இந்நிலையில், தேவையில்லாத மற்றும் சம்பந்தமில்லாத மின்னஞ்சல்கள் பயனாளர்களை அடைவதைத் தடுக்க புதிய நடவடிக்கை எடுத்திருக்கிறது கூகுள். ஒரே நேரத்தில் அதிகப்படியான மின்னஞ்சல்களை அனுப்புவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, அதன் மூலம் தேவையற்ற மின்னஞ்சல்கள் பயனாளர்களை அடைவதைத் தடுக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஒருநாளில் 5,000 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவிருக்கிறது கூகுள். இந்தப் புதிய நடவடிக்கையின் கீழ், அதிகப்படியான மின்னஞ்சல் அனுப்புவர்கள் தேவையற்ற மின்னஞ்சல் கணக்கை 0.3%-தத்திற்குள் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளவிருக்கிறது கூகுள்.
தேவையற்ற மின்னஞ்சல்களை அனுப்புவதைக் குறைக்க நடவடிக்கை:
நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு வரும் பல்வேறு தேவையற்ற மின்னஞ்சல்களை நாமே ஏதாவது ஒரு தளத்தில் ஆமோதித்து அழைத்து வந்திருப்போம். அப்படியான மின்னஞ்சல்களை அன்சப்ஸ்கிரைப் செய்ய முயலும் போது பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கும். அதனை சரி செய்யும், ஒரு கிளிக்கில் பயனாளர்கள் குறிப்பிட்ட அனுப்புநரின் மின்னஞ்சல்களுக்கு அன்சப்ஸ்கிரைப் செய்ய முடிகின்ற வகையிலான வசதியை அளிக்க வேண்டும் என்றும் அனுப்புநர்களுக்கு அறிவுறுத்தவிருக்கிறது கூகுள். மேலும், பயனாளர்களின் தகவல் திருட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களைத் தடுக்க, அதிகப்படியான மின்னஞ்சல் அனுப்புவர்கள் தங்களுடைய அடையாளத்தை நிரூபிக்க வகையிலான புதிய கட்டுப்பாட்டையும் கொண்டு வரவிருக்கிறது கூகுள். இந்த வழிமுறைகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.