மீண்டும் தள்ளிப் போன ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வெளியீடு
செய்தி முன்னோட்டம்
ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான புதிய ஆண்ராய்டு 14 இயங்குதளத்தை முன்னதாக, செப்டம்பர் மாதம் கூகுள் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி இந்த மாதம் புதிய இயங்குதளத்தை கூகுள் அறிமுகப்படுத்தவில்லை.
மேலும், புதிய இயங்குதளத்தை அக்டோபர் தொடக்கத்திலேயே கூகுள் வெளியிடலாம் என புதிய தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக தங்களுடைய பிக்சல் மாடல் போன்களுக்கான செப்டம்பர் மாத பாதுகாப்பு அப்டேட்டை வழங்கியிருக்கிறது கூகுள்.
இந்த பாதுகாப்பு அப்டேட்டில், புதிய வசதிகள் எதையும் அறிமுகப்படுத்தாமல், பிக்சல் போன்கள் பிரச்சினையின்றி இயங்குவதற்குத் தேவையான பாதுகாப்பு மேம்பாடுகளை மட்டும் செய்திருக்கிறது கூகுள்.
ஆண்ட்ராய்டு
எப்போது வெளியாகிறது ஆண்ட்ராய்டு 14?
புதிதாக கிடைத்திருக்கும் தகவல்களின் படி அக்டோபர் 4ம் தேதி, பிக்சல் 8 சீரிஸின் அறிமுகத்துடன் சேர்த்து, புதிய ஆண்ட்ராய்டு 14 இயங்தளத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், பிப்ரவரி மாதமே ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்திற்கான பீட்டா வெர்ஷன்களை அந்நிறுவனம் வெளியிடத் தொடங்கிவிட்டது.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து சில பீட்டா வெர்ஷன்களை வெளியிட்டது அந்நிறுவனம். ஆகஸ்ட் மாதங்களில் வெளியிட்ட பீட்டாவில் சில கோளாறுகளை நீக்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தது அந்நிறுவனம்.
கோளாறுகள் இல்லாத சிறந்த இயங்குதளமாக புதிய இயங்குதளத்தை வெளியிடும் நோக்கத்துடனேயே வெளியீட்டுத் தேதியை கூகுள் தொடர்ந்து தள்ளி வைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.