இருப்பிடத் தகவல்களைப் பகிரும் வசதியை 'Contacts' சேவையில் அளித்த கூகுள்
தங்களுடைய தொடர்புகள் (Contacts) செயலியில் பயனாளர்களின் இருப்பிடத்தை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். 4.22.37.586680692 என்ற வெர்ஷனில் இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்த வசதியைப் பயன்படுத்த, குறிப்பிட்ட தொடர்பின் ஜிமெயில் ஐடியையும் நம்முடைய தொடர்புகளில் நாம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ்அப்பிலேயே பெரும்பாலான நேரங்களில் இருப்பிடத் தகலைப் பகிர்ந்து வந்திருப்போம். இந்தப் புதிய வசதி மூலம் இனி, நம்முடைய அடிப்படையான தொடர்புகள் சேவையில் இருந்தே இருப்பிடத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால், இந்த வசதியைப் பயன்படுத்த, கூகுளின் தொடர்புகள் செயலியை நாம் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுளின் தொடர்புகள் செயலியுடன் இணையும் கூகுள் மெஸேஜஸ்:
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அடிப்படையான சேவையாக வழங்கப்படும் தங்களுடைய தொடர்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் செயலிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது கூகுள். முக்கியமாக, ஆப்பிளில் வழங்கப்பட்டு வரும் ஐமெஸேஜ் சேவைக்கு இணையாகத் தங்களுடை சேவையை மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறது கூகுள். எனவே, எதிர்காலத்தில் தங்களுடைய கான்டேக்ட்ஸ் மற்றும் மெஸெஜஸ் செயலிகளை ஒன்றாக கூகுள் இணைக்கலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இருப்பிட தகவல் பகிர்வு வசதியும், பல்வேறு புதிய பயனாளர்களை கூகுளின் அடிப்படை சேவைகளை பயன்படுத்தத் தூண்டும் என்ற அடிப்படையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது இந்த வசதியானது படிப்படியாக அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.