Loading...
லண்டன் கூகுள் கிளவுட் முடக்கம்: ரிவோலட், ஹெச்எஸ்பிசி உள்பட முன்னணி வங்கிகளின் சேவைகள் பாதிப்பு
கூகுள் கிளவுட் சேவையில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது

லண்டன் கூகுள் கிளவுட் முடக்கம்: ரிவோலட், ஹெச்எஸ்பிசி உள்பட முன்னணி வங்கிகளின் சேவைகள் பாதிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 20, 2026
05:08 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிளவுட் சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரபல டிஜிட்டல் வங்கியான Revolut உட்பட பிரிட்டனின் முன்னணி வங்கிகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கார்டுகள் இயங்காமலும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமலும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லண்டனைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் கூகுள் கிளவுட்டின் europe-west2 பிராந்தியத்தில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிரிட்டன் நேரப்படி காலை 7 மணிக்குப் பிறகு இந்த முடக்கம் தொடங்கியது.

கோளாறு

பாதிக்கப்பட்ட பிரதான சேவைகள்

கூகுள் கம்ப்யூட் எஞ்சின், கூகுள் குபெர்னெட்டீஸ் எஞ்சின், கிளவுட் ரன், கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட முக்கியக் கிளவுட் கட்டமைப்புகள் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ரிவோலட் வங்கியின் சேவை முடங்கியதைத் தொடர்ந்து, HSBC, லாய்ட்ஸ் மற்றும் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து போன்ற பெரிய வங்கிகளின் சேவைகளிலும் இடையூறுகள் பதிவாகியுள்ளன.

வங்கி ஆப் இயங்காததாலும், டெபிட்/கிரெடிட் கார்டுகள் நிராகரிக்கப்பட்டதாலும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

Downdetector தளத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் புகார்களைப் பதிவு செய்தனர்.

சூப்பர் மார்க்கெட்களில் பொருட்கள் வாங்கிவிட்டுப் பணம் செலுத்த முடியாமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வாடிக்கையாளர் பெட்ரோல் பங்க்கில் பணம் செலுத்த முடியாமல் தவித்ததாகவும், முதியவர்கள் கடைகளில் காத்திருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

விளக்கம்

வங்கி நிர்வாகம் மற்றும் கூகுளின் விளக்கம்

ரிவோலட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது பல சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதைச் சரிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தனிப்பட்டத் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன" எனத் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளது.

கூகுள் நிறுவனமும் தனது சேவை நிலவரப் பக்கத்தில் லண்டன் பிராந்தியத்தில் பிணையக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டு, அதைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT