மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு
சேவைக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சையில், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய மொபைல் ஆப்களை மீட்டெடுப்பதற்கான செயல்முறையை கூகுள் தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுடன் கூகுள் நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சேவைக் கட்டணம் செலுத்துதல் தொடர்பான சர்ச்சையில், பாரத் மேட்ரிமோனி போன்ற சில பிரபலமான மேட்ரிமோனி ஆப்கள் உட்பட 10 நிறுவனங்களின் ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நேற்று அகற்றியது.இந்தியாவில் உள்ள 94% போன்கள் ஆண்ட்ராய்டுகளாக இருப்பதால், பிளே ஸ்டோர் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஆப் ஆகும்.
இந்திய நிறுவனங்கள் மற்றும் கூகுளுக்கு இடையேயான பிரச்சனைகள்
இந்நிலையில், பாரத் மேட்ரிமோனி, நாக்ரி(Naukri) போன்ற நன்கு அறியப்பட்ட சில ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நேற்று அகற்றியது. ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களுக்கு 11% முதல் 26% வரையிலான கட்டணங்களை ஆப்ஸ்-இன்-ஆப் பேமெண்ட்களில் கூகுள் விதித்து வருகிறது. இதை நியாயமற்றது என்று கூறும் இந்திய நிறுவனங்கள் நீண்டகாலமாக இந்த கட்டணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பிரச்சனையால் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நேற்று சில ஆப்களை அகற்றியது. இந்த நடவடிக்கை குறித்து இன்று காலை பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதையே கூகுளுக்கு தெரிவிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.