கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி!
இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முக்கியமான ஒன்றாக திகழும் கோவாவில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செல்ஃப் டிரைவிங் ரோபோ மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதனை, கோவா அரசால் உயிர் காக்கும் பணியை மேற்கொண்டு வரும் த்ரிஷ்டி மரைன் என்ற அமைப்பு முன்னெடுத்துள்ளது. கடற்கரையில் கண்காணிக்கும் அந்த ரோபோவின் பெயர் Aurus மற்றும் கண்காணிப்பு அமைப்பின் பெயர் Triton என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீர்நிலைகளில் உயிர்காக்கும், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருபவர்களுக்கு தக்க நேரத்தில் தகவல் கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
கோவாவில் பாதுகாப்பில் செயல்படும் AI ரோபோவின் செயல்பாடுகள் என்ன?
மேலும், சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் கடலில் இறங்கினால் எச்சரிப்பது, பெரிய அலைகள், நீச்சல் செய்யக்கூடாத பகுதிகள் மற்றும் அங்கு நிலவும் சூழல் குறித்து இது தகவல் கொடுக்கும் எனக்கூறப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் அதுகுறித்த தகவலை நிகழ் நேரத்தில் தெரிவிக்குமாம். அதுவும் அது பன்மொழி நோட்டிபிகேஷன் என சொல்லப்படுகிறது. சுமார் 110 மணிநேரம் கடற்கரையில் இது தன் பணியை செய்துள்ளதாம். தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 100 Triton கண்காணிப்பு அமைப்பு மற்றும் 10 Aurus ரோபோவை களத்தில் இறக்க உள்ளதாம் அந்த அமைப்பு.