டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த, தனது சொந்த UPI சேவையை அறிமுகப்படுத்துகிறது ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட், அதன் சொந்த Unified Payments Interface (யுபிஐ) சேவையை வெளியிட்டுள்ளது. அதன் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, டிஜிட்டல் கட்டண விருப்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் யுபிஐ ஆனது, அதன் பிளாட்ஃபார்மிலும், வெளியேயும் வணிகப் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த UPI ஐடி-யை உருவாக்க அனுமதிக்கும். 2023 இல், UPI மூலமாக 117 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் கையாளப்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.183 லட்சம் கோடி. UPI ஐ அறிமுகப்படுத்திய பிறகு, ஃபிளிப்கார்ட் சூப்பர் காயின்கள், கேஷ்பேக், பிராண்ட் வவுச்சர்கள் மற்றும் தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்திற்காக மைல்ஸ்டோன் நன்மைகள் போன்ற லாயல்டி சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் UPI என்னென்ன பயன்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது?
ஃபிளிப்கார்ட் UPI மூலமாக இ-காமர்ஸ் பரிவர்த்தனைகள், ஸ்கேன் செய்து UPI ஐடிக்கு பணம் செலுத்துதல், ரீசார்ஜ்கள் மற்றும் பில் பேமெண்ட்கள் போன்ற பல சேவைகளை ஃபிளிப்கார்ட் UPI ஐப் பயன்படுத்தி, பயனர்கள் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவைக்கும் பணம் செலுத்தலாம். ரீசார்ஜ்கள் மற்றும் பில் பேமெண்ட்டுகளுக்கான சிங்கிள் கிளிக் வசதி மற்றும் விரைவான விருப்பங்களையும் இந்த சேவை அறிமுகப்படுத்துகிறது. இது பணம் செலுத்தும் செயல்முறையை மிகவும் எளிமையாக்குகிறது. முதற்கட்டமாக, Flipkart ஆப்ஸ் மூலம் @fkaxis என்ற UPI ஹாண்டில் கொண்டு பயனர்கள் UPI க்கு பதிவு செய்ய ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்துள்ளது. Flipkart யுபிஐ சேவை ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.