இனி குழந்தைகளுக்கு சோசியல் மீடியா கிடையாது? மெகா திட்டத்தை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்
செய்தி முன்னோட்டம்
குழந்தைகள் தங்களின் சுய அடையாளத்தையும், ஆளுமையையும் அல்காரிதம்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக, நிஜ உலகை அனுபவித்து வாழ வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வரவுள்ளது. பிரஸ்ஸல்ஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
We need age-appropriate restrictions on platforms.
— Ursula von der Leyen (@vonderleyen) July 13, 2026
This is not about whether children can access social media.
It is about when social media can access our children.
For a safer start online for every child ↓ https://t.co/QheuC3gFzx
சட்ட வரைவு
"சமூக ஊடகம் ஒன்றும் விளையாட்டு பொம்மை அல்ல"
கோடைகால விடுமுறைக்கு பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்ட உர்சுலா வான் டெர் லேயன், "நம் குழந்தைகளுக்கு நிஜ உலகில் விளையாடவும், நட்பை உருவாக்கவும், தவறுகள் செய்து கற்றுக்கொள்ளவும் போதிய நேரம் தேவை. இது குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைப் பற்றியது அல்ல; சமூக ஊடகங்கள் எந்த வயதில் நம் குழந்தைகளை அணுகலாம் என்பதை பற்றியது" என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும், வெவ்வேறு வயது குழுவினருக்கு படிப்படியாக சமூக ஊடக அணுகலை அனுமதிக்கும் முறையை (Phased Access) அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எச்சரிக்கை
பிக் டெக் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காகக் குழந்தைகளைத் தடையின்றி பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று எச்சரித்த அவர், தற்போதைய நிலை நீடித்தால் அடுத்த தலைமுறை ஒட்டுமொத்தமாக மன உளைச்சல், அடிமைத்தனம் மற்றும் துயரத்திற்கு ஆளாக நேரிடும் என்றார்.
இணையதள பக்கங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், தங்களின் பயனர்கள் மீது அக்கறை காட்டுவதற்கும் பெற்றோர்களை விட அந்தந்த தொழில்நுட்ப நிறுவனங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விளக்கம்
சீட் பெல்ட் உதாரணத்துடன் அதிரடி விளக்கம்
ஐரோப்பிய சட்ட விதிகளின்படி ஒரு பொருளை உருவாக்குபவரே அதன் பாதுகாப்பிற்கு பொறுப்பு என்பதை விளக்கிய உர்சுலா, "கார் தயாரிப்பாளர்கள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பானதாக வடிவமைக்க வேண்டும். அதற்காகக் குழந்தைகள் தங்களின் சீட் பெல்ட்டை தாங்களே வடிவமைக்க வேண்டும் என்றோ, அல்லது பெற்றோர்கள் வீட்டில் ஏர்பேக்குகளை பொருத்த வேண்டும் என்றோ நாம் எதிர்பார்ப்பதில்லை. இதே விதிதான் கூகுள், மெட்டா போன்ற பிக் டெக் நிறுவனங்களுக்கும் பொருந்தும்." என்றார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, இந்தச் சட்ட முன்மொழிவு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.