LOADING...
எக்ஸ் கிரியேட்டர்களுக்கு ஷாக் நியூஸ்! வருவாய் குறைப்பு திட்டத்தை நிறுத்தி வைத்த எலான் மஸ்க்; பின்னணி இதுதான்
எக்ஸ் வருவாய் பகிர்வு திட்டத்தில் மாற்றம்

எக்ஸ் கிரியேட்டர்களுக்கு ஷாக் நியூஸ்! வருவாய் குறைப்பு திட்டத்தை நிறுத்தி வைத்த எலான் மஸ்க்; பின்னணி இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 26, 2026
07:16 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைத்தளமான எக்ஸ், தனது வருவாய் பகிர்வு கொள்கையில் கொண்டு வரவிருந்த ஒரு அதிரடி மாற்றத்தை எலான் மஸ்க் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். கிரியேட்டர்களின் வருமானத்தைப் பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்திருந்த இந்தத் திட்டம், பயனர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் லொகேஷன் டிரான்ஸ்பரன்சி என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரு பதிவை இடும் பயனர் எந்த நாட்டில் இருந்து பதிவிடுகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. உதாரணமாக, இந்தியாவின் அரசியல் குறித்துத் தீவிரமாகப் பதிவிட்டு வந்த பல கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து இயங்குவது கண்டறியப்பட்டது.

போலி ஈடுபாடு

போலி ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டம்

இத்தகைய போலி ஈடுபாடுகளை கட்டுப்படுத்தவே எக்ஸ் நிறுவனம் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. அதாவது, ஒரு கிரியேட்டர் எந்த நாட்டில் வசிக்கிறாரோ, அந்த நாட்டுப் பயனர்களிடம் இருந்து வரும் பார்வைகளுக்கு மட்டுமே அதிக வருவாய் வழங்கப்படும் என்பதுதான் அந்தத் திட்டம். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், உலகெங்கிலும் உள்ள கிரியேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 'dvorahfr' என்ற பயனர் இது குறித்து எலான் மஸ்க்கிடம் ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்தார். "ஆங்கிலம் பேசாத நாடுகளில் வசிக்கும் பல கிரியேட்டர்கள், உலகளாவிய ரசிகர்களைச் சென்றடைய ஆங்கிலத்தில் பதிவிடுகின்றனர். அத்தகையவர்களின் உழைப்பை இந்தப் புதிய பாலிசி சிதைத்துவிடும்." என்று அவர் வாதிட்டார்.

நிறுத்தி வைப்பு

நிறுவனம் சொல்லும் காரணம்

இதனை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க், பயனர்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இந்த வருவாய் பகிர்வு மாற்றத்தைத் தற்போது நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் நிகிதா பியர் இது குறித்துக் கூறுகையில், "அமெரிக்க மற்றும் ஜப்பான் அரசியல் விவாதங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டைக் குறைப்பதே எங்கள் நோக்கம். கிரியேட்டர்கள் தங்கள் உள்ளூர் ரசிகர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தான் எக்ஸ் தளத்தின் மிகப்பெரிய சந்தைகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்த மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், போலி கணக்குகளைக் கட்டுப்படுத்தவும், உண்மையான உள்ளூர் விவாதங்களை ஊக்குவிக்கவும் எக்ஸ் நிறுவனம் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது.

Advertisement