LOADING...
எல் நினோ வருகையால் பருவமழையில் ஆபத்து: இந்தியப் பெருங்கடல் டைபோல் காப்பாற்றுமா? முழு விபரம்
எல் நினோ ஆபத்திலிருந்து காப்பாற்றும் இந்தியப் பெருங்கடல் டைபோல் குறித்த விபரம்

எல் நினோ வருகையால் பருவமழையில் ஆபத்து: இந்தியப் பெருங்கடல் டைபோல் காப்பாற்றுமா? முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 14, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் நடப்பு ஆண்டில் வறட்சி மற்றும் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலைகளை உருவாக்கக்கூடிய எல் நினோ காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக சர்வதேச வானிலை முகமைகள் எச்சரித்துள்ளன. இந்த எல் நினோ தாக்கம் தீவிரமடைந்தால், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், இந்தியப் பருவமழையை இந்த வறட்சியில் இருந்து காப்பாற்றக்கூடிய 'இந்தியப் பெருங்கடல் டைபோல்' (Indian Ocean Dipole - IOD) என்ற மற்றொரு கடலியல் நிகழ்வை நோக்கி தற்பொழுது ஒட்டுமொத்த வானிலை ஆராய்ச்சியாளர்களின் கவனமும் திரும்பியுள்ளது.

விளக்கம்

இந்தியப் பெருங்கடல் டைபோல் (IOD) என்றால் என்ன?

இந்தியப் பெருங்கடல் டைபோல் (IOD) என்பது பசிபிக் பெருங்கடலில் தோன்றும் எல் நினோ போலல்லாமல், நேரடியாக இந்தியப் பெருங்கடலின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையே ஏற்படும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டைக் குறிப்பதாகும். இது நேர்மறை (Positive), எதிர்மறை (Negative) மற்றும் நடுநிலை (Neutral) என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இது நடுநிலையாக இருந்தாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு வலுவான 'நேர்மறை ஐஓடி' (Positive IOD) கட்டம் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் முதன்முறையாகக் கணித்துக் கூறியுள்ளது.

நன்மை

நேர்மறை ஐஓடி இந்தியாவிற்கு எவ்வாறு உதவும்?

ஒரு நேர்மறை ஐஓடி நிகழ்வின் போது, ஆப்பிரிக்கக் கடற்கரையை ஒட்டியுள்ள மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியின் நீர் வழக்காத்தை விட அதிக வெப்பமடைகிறது. அதே நேரத்தில், இந்தோனேசியாவை ஒட்டியுள்ள கிழக்குக் கடல் பகுதி ஒப்பீட்டளவில் குளிர்ந்த நிலைக்கு மாறுகிறது. இந்த அசாத்திய வெப்பநிலை வேறுபாடானது காமக்காற்றின் திசையை மாற்றி, இந்திய நிலப்பரப்பை நோக்கி அதிகப்படியான மழை மேகங்களையும் ஈரப்பதத்தையும் தள்ளுகிறது. இந்தச் செயல்முறையானது எல் நினோவினால் ஏற்படும் மழைப் பற்றாக்குறையைச் சமன் செய்து, இந்தியாவிற்கு வழக்கமான பலத்த மழையைத் தர பெரிதும் உதவுகிறது.

Advertisement

முந்தைய நிகழ்வு

1997 ஆம் ஆண்டு நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலநிலை பாடம்

கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால், எல் நினோவின் வறட்சிப் பிடியில் இருந்து இந்தியாவைக் காப்பதில் ஐஓடி முக்கியப் பங்கு வகித்துள்ளதை அறியலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக 1997 ஆம் ஆண்டு விளங்கி வருகிறது. அந்த ஆண்டில் உலக வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ தாக்கம் பதிவாகியிருந்தது. ஆனாலும், அதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் ஒரு சக்திவாய்ந்த நேர்மறை ஐஓடி உருவானதால், இந்தியா பெரிய அளவிலான வறட்சிப் பாதிப்பு எதற்கும் உள்ளாகாமல் தப்பியது. இதனால் தான் தற்பொழுதும் விஞ்ஞானிகள் இந்தியப் பெருங்கடலின் தட்பவெப்ப நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

பொருளாதார விளைவுகள்

பருவமழை பற்றாக்குறையால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள்

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழையளவில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தைப் பூர்த்தி செய்வது இந்த தென்மேற்கு பருவமழைதான். இது நாட்டின் விவசாய உற்பத்தி, நிலத்தடி நீர் இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு மிக இன்றியமையாததாகும். ஒருவேளை ஐஓடி நமக்குச் சாதகமாக அமையாமல் பருவமழை பொய்த்தால், நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்கள் வறண்டு, பயிர் இழப்புகள் ஏற்பட்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உருவாகும். எனவே, வரும் மாதங்களில் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போகும் நேர்மறை மாற்றங்கள் மட்டுமே இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் அரணாக மாறப் போகிறது.

Advertisement