
மருந்துப் பேக்கேஜிங்கில் பிரெய்லி மற்றும் குரல் உதவியுடன் கூடிய QR குறியீடுகள் விரைவில்?
செய்தி முன்னோட்டம்
பார்வைக் குறைபாடுடைய நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளின் பேக்கேஜிங்கில் விரைவில் பிரெய்லி லேபிள்கள், அல்லது குரல் வழிகாட்டியுடன் கூடிய QR குறியீடுகள் இடம்பெறலாம். மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின்(CDSCO) உச்சக் குழு பரிந்துரைத்த புதிய முன்மொழிவுகள் தற்போது பொதுமக்களின் கருத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பார்வைக் குறைபாடுள்ளவர்கள் மருந்துப் பொருட்களின் பெயர் மற்றும் காலாவதி தேதிகளை அடையாளம் காண இயலாத காரணத்தால், அவர்கள் மற்றவர்களைச் சார்ந்து மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை தடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரெய்லி லேபிள்கள் அல்லது QR குறியீடுகள் பார்வை குறைபாடுள்ளவர்கள் பெரிதும் பயன்படுத்தும் மருந்துகளில் இடம்பெறும். மருந்தளவு, பக்கவிளைவுகள், எச்சரிக்கைகள் ஆகியவை பயனாளிகளுக்காக ஆடியோ அல்லது டிஜிட்டல் வடிவங்களில் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அம்சங்கள்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
முதற்கட்டமாக, 'மோனோ கார்டன்' பேக்கேஜிங் (அதாவது தனித்தனியாக கையடக்கமாக இருக்கும் மருந்துப் பெட்டிகள்) உடைய மருந்துகளுக்கு இது பொருந்தும். கண் சொட்டு மருந்துகள் போன்றவை முதலில் முக்கியத்துவம் பெரும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பிரெய்லி லேபிள் வடிவமைப்பு, இந்திய பிரெய்லி கவுன்சில்(BCI) அல்லது NIEPID போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும். இந்த நடைமுறை ஊசி, தடுப்பூசி போன்ற சுகாதார நிபுணர்களால் நேரடியாக வழங்கப்படும் பொருட்களுக்கு பொருந்தாது. இந்த நடைமுறை ஊசி, தடுப்பூசி போன்ற சுகாதார நிபுணர்களால் நேரடியாக வழங்கப்படும் பொருட்களுக்கு பொருந்தாது. பேக்கேஜிங்கில் இட பற்றாக்குறை இருந்தால், மருந்தின் பெயர் மற்றும் பவர் மட்டுமே பிரெய்லியில் வழங்கப்படும். மற்ற தகவல்களுக்கு QR குறியீடு அல்லது பரந்த வடிவத்தில் துண்டுப் பிரசுரம் தரப்படும்.