12,000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மனம் திறந்த சுந்தர் பிச்சை
செய்தி முன்னோட்டம்
2022ம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்று தான் கூற வேண்டும். அந்த ஆண்டில் மட்டும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
2022ம் ஆண்டு அதிக பணிநீக்கங்களை செய்த தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது கூகுள். அந்த ஆண்டு மட்டும் சுமார் 12,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது.
இது உலகளாவிய கூகுள் நிறுவன பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 6 சதவிகிதமாகும். இந்நிலையில், அந்த பணிநீக்கம் குறித்து சமீபத்தில் கூகுள் ஊழியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் மனம் திறந்திருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை.
கூகுள்
மனம் திறந்த சுந்தர் பிச்சை:
கூகுள் நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பின் போது, 2022ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிநீக்க நடவடிக்கையானது கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஓன்றே என வாதிட்டிருக்கிறார் சுந்தர் பிச்சை.
கூகுள் நிறுவனம் முன்னேற்ற பாதையில் செல்லவும், எதிர்காலத்தில் தேவையான முதலீடுகளை மேற்கொள்ளவும் அந்தப் பணிநீக்கம் அவசியம் என அவர் தெரிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பணிநீக்க நடவடிக்கையை இன்னும் சிறப்பான முறையில் நிறுவனம் கையாண்டிருக்கலாம் எனவும் தன்னுடைய பேச்சின் போது அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், இது நிறுவனத்திற்கு ஒரு சவாலான காலக்கட்டம் எனவும், கடந்த 25 ஆண்டுகளில் இப்படி ஒரு கட்டத்தை கூகுள் நிறுவனம் சந்தித்ததில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.