டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் படி, பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி, விமானச் சேவைகளில் ஏற்பட்ட இந்தத் தடைக்கு, வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) மென்பொருள் மேம்படுத்தலின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார். "விமானப் பயணத் திட்டங்களை (Flight Plans) தானாகவே புதுப்பிக்கும் (automatic updation) வசதி வேலை செய்வதை நிறுத்திவிட்டது. இது ஒரு சைபர் தாக்குதல் அல்ல," என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சேவை
கிட்டத்தட்ட 500 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன
டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் (DIAL), ATC-யின் விமான திட்டமிடல் செயல்முறையை ஆதரிக்கும் தானியங்கி செய்தி மாறுதல் அமைப்பில் (Automatic Message Switching System) ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாகவே விமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன என்று கூறியுள்ளது. விமானப் போக்குவரத்து கண்காணிப்பு தளமான Flightradar24 அறிக்கையின்படி, வியாழக்கிழமை மட்டும் 513 விமானங்கள் தாமதமாகின. இந்த சிக்கலை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னுரிமை அளித்து பணியாற்றி வருவதாகவும், பயணிகள் தங்களின் திருத்தப்பட்ட பயண அட்டவணைகள் குறித்து விமான நிறுவனங்களிடமிருந்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே டெல்லியை தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டன.