இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தரையிறக்கத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3
நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் 3யின் ப்ரொபல்ஷன் மாடியூல் மற்றும் லேண்டர் மாடியூலை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தனித்தனியே பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை தனியே சுற்றி வந்து கொண்டிருந்த லேண்டர் மாடியூலின் சுற்று வட்டப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் 'டீபூஸ்டிங்' (Deboosting) நடவடிக்கையை கடந்த ஆகஸ்ட் 18ல் வெற்றிகரமாக மேற்கொண்டது இந்திய விண்வெளி அமைப்பு. தற்போது, லேண்டர் மாடியூலின் சுற்று வட்டப்பாதையை மேலும் குறைக்கும் வகையிலான, இரண்டாவது மற்றும் கடைசி டீபூஸ்டிங் நடவடிக்கையை இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ. இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ.
சந்திரயான் 3 திட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
இந்த இரண்டாவது மற்றும் கடைசி டீபூஸ்டிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, லேண்டர் மாடியூலானது 25 கிமீ x 134 கிமீ அளவு சுற்று வட்டப்பாதையில் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. மேலும், தரையிறக்கத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் கடைசி நடவடிக்கையும் இதுவே. அடுத்து வரும் ஆகஸ்ட் 23ல் நிலவில் தரையிறங்குவதற்கு ஆயத்தமாகவிருக்கிறது லேண்டர் மாடியூல். லேண்டர் மாடியூலில் அனைத்து கருவிகளும் சரியாகச் செயல்படுகிறதா என்ற சரிபார்ப்புகள் தற்போதிருந்து மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 23ம் தேதி தரையிறங்கும் இடத்தில் சூரிய உதயத்திற்காகக் லேண்டர் மாடியூல் காத்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சூழ்நிலைகளும் எதிர்பார்த்தபடியே சாதகமாக அமையும் பட்சத்தில், ஆகஸ்ட் 23 மாலை 5.45 மணிக்கு லேண்டர் மாடியூலானது நிலவில் தரையிறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது இஸ்ரோ.