சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு!
நாளை மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்காக தயாராகி வருகிறது இந்தியா. இஸ்ரோவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3 நாளை, நிலவில் கால்பதிக்கவிருக்கிறது. மேலும், முதல் முறையாக நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தவிருக்கிறது இந்தியா. இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட்-23) மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3, விக்ரம் லேண்டரின் தரையிறக்கம் திட்டமிடப்பட்டிருக்கிறது. லேண்டரில் ஏதாவது கோளாறுகள் கண்டறியப்பட்டாலோ அல்லது தரையிறங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லையென்றாலோ, தரையிறக்கத்தை ஆகஸ்ட்-27ம் தேதிக்கு ஒத்தி வைக்கவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோவின் அகமதாபாத் மையத்தைச் சேர்ந்த நிலேஷ் எம் தேசாய். நாளையே சந்திரயான் 3 தரையிறக்கப்படுமா அல்லது ஆகஸ்ட்-27க்குத் தள்ளி வைக்கப்படுமா என்பது, நாளைய தரையிறக்கத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 ஆர்பிட்டருடன் இணைந்த லேண்டர் மாடியூல்:
தற்போது ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து விலகி, நிலவைத் தனியே வலம் வந்து கொண்டிருக்கிறது லேண்டர் மாடியூல். இந்நிலையில், நேற்று சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் மாடியூலின் இருவழி தொடர்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ. 2019ல் செயல்படுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரானது, தற்போது எந்த பிரச்சினையும் இன்றி நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சந்திரயான் 3 லேண்டரின் வெற்றிகரமா தரையிறக்கத்தில் சந்திரயான் 2வின் ஆர்பிட்டரும் முக்கியப் பங்கு வகிக்கவிருக்கிறது. மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவிருக்கும் நிலையில், இஸ்ரோவின் அனைத்துத் தளங்களிலும் மாலை 5.20க்கும், டிடி தொலைக்காட்சியில் 5.27க்கும் நேரலை தொடங்கும் எனத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ.