சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ
சந்திராயன்-2 திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து சந்திராயன்-3 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. சந்திராயன்-2 திட்டமானது வெற்றியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். அதாவது, எப்படி எல்லாம் திட்டத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்துவது என்பதை ஆலோசித்து உருவாக்கப்பட்ட திட்டம். ஆனால், இந்த முறை அந்தத் தோல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தோல்விகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமாக, சந்திராயன்-3 திட்டமிட்பபட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். எந்தெந்த வகையில் எல்லாம் இந்தத் திட்டம் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது ஆராயப்பட்டு, அதனை தடுப்பதற்கான பல்வேறு வகையான வசதிகள் இந்தத் திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.
ஏன் தோல்வியடைந்தது சந்திராயன்-2 திட்டம்?
சந்திராயன்-2 திட்டத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது இஸ்ரோ. நிலவின் மேற்பரப்பை நெருங்கும் போது, லேண்டரின் வேகத்தைக் குறைக்க ஐந்து இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. இது தேவைக்கும் அதிகமான உந்துவிசையைக் கொடுத்து லேண்டரின் திசையை மாற்றியிருக்கிறது. விண்கலத்தின் வேகத்திற்கு உடனடியாக ஈடுகொடுக்கும் அளவிற்கு மென்பொருள் திறன் இல்லாததும் சந்திராயன்-2வின் தோல்விக்கு ஒரு காரணம். தரையிறங்க வேண்டிய இடம் 500மீ சதுரடி என்ற குறைவான அளவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதனால், தரையிறங்கும் இடத்தை சரியாக லேண்டரால் அடைய முடியவில்லை. இப்படி பல்வேறு வகையில் ஏற்பட்ட கோளாறுகள் ஒன்றுசேர்ந்து ஒட்டு மொத்தமாக, திட்டத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. ஆனால், தற்போது அந்தக் கோளாறுகளை எதிர்கொள்ளும் விதமாக புதிய திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.