இன்ஸ்டாகிராமில் குழந்தை வன்கொடுமை விளம்பரங்கள்: மெட்டா உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கங்களில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையிலான வன்கொடுமை விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதாக வெளியான அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மத்திய அரசு தற்பொழுது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பித்துள்ள அவசர உத்தரவின்படி, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் நேரில் விளக்கம் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
பிபிசி புலனாய்வு
பிபிசி நடத்திய புலனாய்வும் அதிர்ச்சி உண்மைகளும்
பிரிட்டனின் முன்னணி ஊடகமான பிபிசி இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் குறித்து ஒரு ரகசியப் புலனாய்வை நடத்தியது. அந்த ஆய்வில், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரேப் வீடியோ மற்றும் சைல்டு வீடியோ போன்ற தடை செய்யப்பட்ட அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் சொந்த விளம்பரக் கொள்கை மற்றும் ஏஐ தொழில்நுட்பமே இந்த விளம்பரங்களை சரிபார்த்து அங்கீகரித்து ஒளிபரப்ப அனுமதித்துள்ளதுதான் இதற்கு பின்னுள்ள மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் டூ டெலிகிராம்
வெறும் ரூ.99க்கு விற்கப்பட்ட வீடியோக்கள்
இந்த இன்ஸ்டாகிராம் விளம்பரங்களின் உள்ளே இருக்கும் லிங்க்குகளை பயனர்கள் கிளிக் செய்யும் போது, அது அவர்களை நேரடியாக டெலிகிராம் செயலியில் உள்ள சில ரகசியக் குழுக்கள் மற்றும் சேனல்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு வெறும் 99 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான வன்கொடுமை வீடியோக்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வந்ததை பிபிசி தனது ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. இந்த செய்தி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்திய ஐடி அமைச்சகம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
கணக்குகள் முடக்கம்
கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா மற்றும் டெலிகிராம் விளக்கம்
இந்தக் கடுமையான குற்றச்சாட்டு குறித்து பிபிசி ஊடகம் மெட்டா நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, விதிகளை மீறி செயல்பட்ட அந்த விளம்பரங்களும், அவற்றை வெளியிட்ட கணக்குகளும் உடனடியாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் ஒளிபரப்பான பிறகும் தங்களது கண்காணிப்புத் தொழில்நுட்பம் தொடர்ந்து செயல்படுவதாகவும் மெட்டா விளக்கமளித்துள்ளது. இதேபோல், இந்த சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 2.74 லட்சத்திற்கும் அதிகமான சேனல்கள் மற்றும் குரூப்களை நடப்பு 2026 ஆம் ஆண்டில் மட்டும் தாங்கள் நீக்கியுள்ளதாக டெலிகிராம் நிறுவனமும் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது.