பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் ப்ளூஸ்கை
ட்விட்டரின் துணை நிறுவனர் ஜாக் டார்ஸேயின் ஆதரவு பெற்ற ப்ளூஸ்கை (Bluesky) சமூக வலைத்தளமானது, பயனர்களுக்கு புதிய வசதிகளை தற்போது அறிமுகப்படுத்தி வருகிறது. பொதுப்பயனர்களுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படாமல், 'இன்வைட் ஒன்லி' முறையிலேயே இயங்கி வருகிறது ப்ளூஸ்கை. எனவே, புதிய பயனர்கள் ப்ளூஸ்கை சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதனை ஏற்கனவே பயன்படுத்தும் பயனர்களிடமிருந்தோ அல்லது அத்தளத்திலிருந்து 'இன்வைட்' ஒன்றை பெற்றால் மட்டும் பயன்படுத்த முடியும். ட்விட்டருக்கு மாற்றாக உருவாக்கபட்டிருக்கும் சமூக வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. பிற சமூக வலைத்தளங்களைப் போல அல்லாமல், பயனர் தகவல்களின் கட்டுப்பாடுகளை பயனர்களே கொண்டிருக்கும் வகையில் பரவலாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மீது இந்த சமூக வலைத்தளம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ப்ளூஸ்கையின் புதிய வசதிகள்:
கடந்த ஜூன் மாதம் இத்தளத்தில் புதிய பாதுகாப்புக் கருவிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது செல்ஃப் லேபிளிங் மற்றும் தனி மீடியா டேப் ஆகிய வசதிகளை வழங்கியிருக்கிறது ப்ளூஸ்கை. இதன் மூலம், ஒரு பயனர் தாங்கள் பதிவிடும் உள்ளடக்கம் எவ்வகையானது என்பதை அவரே லேபிளிங் செய்யும் உரிமையை அளித்திருக்கிறது ப்ளூஸ்கை. அடுத்து, பயனர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மட்டும் பார்க்கும் வகையில் தனி மீடியா டேப் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சமூக வலைத்தளமானது, அதன் மேம்பாட்டிற்காக 8 மில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டியிருக்கிறது. விரைவில் இத்தளம் அனைத்துப் பயனர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.