பெருகும் போலி சாட்ஜிபிடி செயலிகள்.. பயனர்களே உஷார்!
செய்தி முன்னோட்டம்
வளர்ந்து வரும் AI சேவையான சாட்ஜிபிடியின் பெயரில் பல மோசடி செயலிகள் இணையத்திலும் ப்ளேஸ்டோரிலும் உலா வருவதாக எச்சரித்திருக்கிறது சோபோஸ் (Sophos) என்ற சைபர்பாதுகாப்பு நிறுவனம்.
இந்த AI செயலிகள் அதிகாரப்பூர்வமாக கூகுள் மற்றும் ஆப்பிளின் ப்ளேஸ்டோர்களிலேயே உலா வருகின்றன.
சில செயலிகளில் சாட்ஜிபிடியின் பெயரையே சற்று மாற்றி பயனர்களை குழப்பும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில செயலிகள் சாட்ஜிபிடி வழங்கும் சேவைகளை தாங்களும் வழங்குகிறோம் எனக்கூறி நம் ஸ்மார்ட்போன்களில் நுழைகின்றன.
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி விட்டு அன்இன்ஸ்டால் செய்துவிட்டாலும், பயனர்களின் கணக்கில் இருந்து பணம் பறிபோவதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர் பயனர்கள்.
இது போன்ற பெரும்பாலான பொய்யான செயலிகள் ப்ளேஸ்டோர்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. எனினும், புதிய செயலிகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
ஆன்லைன் மோசடி
எப்படி நடைபெறுகிறது மோசடி:
இந்த வகை மோசடி செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது இலவச சோதனையாக சில காலம் சேவை வழங்குகின்றன.
அந்த இலவச பயன்பாடு முடிந்தவுடன் பயனர்களை கட்டணம் செலுத்திப் பயன்படுத்த நிர்பந்திக்கின்றன. சந்தா செலுத்தாத பட்சத்தில் தொடர்ந்து விளம்பரங்களை அனுப்பி பயனர்களை சந்தா செலுத்த வைக்கின்றன அல்லது செயலியை அன்இன்ஸ்டால் செய்ய வைக்கின்றன.
சந்தா செலுத்திய பயனர்கள் அல்லது சந்தா செலுத்துவதற்காக தங்களது தகவல்களை அளித்த பயனர்களின் கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் சந்தாவிற்கான பணத்தை சந்தாவை நீக்கினாலும் எடுத்துக் கொள்வதாகப் புகார் அளித்திருக்கின்றனர்.
சந்தா தகவல்களை அளித்த பயனர்கள், இது போன்ற செயலிகளை அன்இன்ஸ்டால் மட்டும் செய்யாமல் சந்தாவில் இருந்து விடுபட கூகுளின் வழிமுறைகளை பயன்படுத்தி சந்தாவை நீக்க வேண்டும்.