தொடரும் டிஜிட்டல் கைது மோசடி; ₹32 கோடி இழந்த பெங்களூர் பெண்; விழிப்புணர்வா இருங்க மக்களே
செய்தி முன்னோட்டம்
பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டிச் செயல்பட்ட மோசடி கும்பலால், ஆறு மாத காலமாகக் கிட்டத்தட்ட ₹32 கோடி வரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி செய்தவர்கள் அவரைத் தொடர்ச்சியான வீடியோ கண்காணிப்பில் வைத்து, 187 வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 2024 இல் தொடங்கிய இந்த மோசடியில், பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு டிஎச்எல் அதிகாரி என்று கூறி மிரட்டல் அழைப்பு வந்தது. அவரது பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் தடைசெய்யப்பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருள் இருப்பதாக அச்சுறுத்தி, பின்னர் வழக்கை சிபிஐ அதிகாரி கவனிப்பதாகக் கூறி இணைப்பை மாற்றியுள்ளனர்.
மிரட்டல்
மிரட்டலால் ஏற்பட்ட பயம்
சைபர் கிரைம் மோசடிக்காரர்கள் தன் வீட்டைக் கண்காணிப்பதாகவும், போலீஸை அணுகக் கூடாது என்றும் மிரட்டியதால், மகனின் திருமணத்திற்காக பயந்து அவர் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றார். மோசடி கும்பல், அந்தப் பெண்ணை ஒரு ஸ்கைப் ஐடியை நிறுவி, தொடர்ச்சியான வீடியோ அழைப்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்தினர். மோஹித் ஹண்டா, ராகுல் யாதவ், பிரதீப் சிங் என்று தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், அவரை நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறி மிரட்டினர். செப்டம்பர் 24, 2024 முதல், அவர் தனது நிலையான வைப்புத் தொகைகளை (Fixed Deposits) உடைத்து, சேமிப்புகளை விற்று, 31.83 கோடி ரூபாயை 187 பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்தவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பியுள்ளார்.
மருத்துவ சிகிச்சை
உடல் மற்றும் மனநல பாதிப்பால் மருத்துவ சிகிச்சை
பிப்ரவரி 2025 க்குள் பணம் திரும்ப வழங்கப்படும் என்று பலமுறை உறுதியளிக்கப்பட்டும், பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இந்தத் தொடர்ச்சியான மன அழுத்தத்தால் அவர் உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், மகனின் திருமணம் முடிந்த பிறகு, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தக் கூட்டுக் குற்றச்செயல் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு தொடர்ந்து டிஜிட்டல் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்கதையாக அரங்கேறுவது, இன்னும் பரவலான விழிப்புணர்வு பிரச்சாரங்களின் அவசியத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.