Loading...
பூமியிலிருந்து 28 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கவே கூடாத மூன்று நட்சத்திர அமைப்பு கண்டுபிடிப்பு
இருக்கவே கூடாத மூன்று நட்சத்திர அமைப்பு கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து 28 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கவே கூடாத மூன்று நட்சத்திர அமைப்பு கண்டுபிடிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2026
04:49 pm

செய்தி முன்னோட்டம்

பூமியிலிருந்து வெறும் 28 ஒளியாண்டுகள் தொலைவில் 'வெலோபோயாய்' (Welopo'ai) என்று பெயரிடப்பட்டுள்ள மிகவும் அரிதான மூன்று நட்சத்திரங்கள் கொண்ட அமைப்பை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு மங்கலான சிவப்பு குள்ள நட்சத்திரம் மற்றும் இரண்டு வெள்ளை குள்ள நட்சத்திரங்களைக் கொண்ட இந்த அமைப்பு, விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டியென் ஆர்டிகாவ் தலைமையிலான குழுவினர், ஹவாயின் மௌனா கியா மலையில் உள்ள கனடா-பிரான்ஸ்-ஹவாய் தொலைநோக்கியின் 'ஸ்பைரூ' கருவியை பயன்படுத்திச் சிவப்பு குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி கோள்கள் உள்ளனவா எனத் தேடியபோது இந்த அபூர்வ அமைப்பை தற்செயலாகக் கண்டறிந்துள்ளனர்.

அரிய கட்டமைப்பு

விண்வெளி விதிகளுக்கு அப்பாற்பட்ட அரிய கட்டமைப்பு

பூமியிலிருந்து குறைந்தபட்சம் 100 ஒளியாண்டுகள் சுற்றளவிற்குள் இதுவரை அறியப்பட்ட எந்தவொரு நட்சத்திர அமைப்பையும் விட 'வெலோபோயாய்' முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

இதன் தனித்துவமான கட்டமைப்பு எவ்வாறு உருவானது என்பது குறித்துத் தெளிவான விளக்கம் இல்லை என்றும், அறிவியல் விதிகளின்படி இத்தகைய அமைப்பு இருப்பதற்கே வாய்ப்பில்லை என்றும் மாண்ட்ரீல் பல்கலைக்கழக வானியற்பியல் பேராசிரியர் பாட்ரிக் டுஃபோர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நட்சத்திரங்களின் வரலாற்றையும் பரிணாமத்தையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை பிரதிபலிக்கும் வகையில், 'குடும்பப் பண்புகளின் பாதை' என்ற பொருள் கொண்ட ஹவாய் மொழிச் சொற்களிலிருந்து இதற்கு 'வெலோபோயாய்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களின் பரிணாமம்

வெள்ளை குள்ள நட்சத்திரங்கள்

சூரியனை போன்ற நிறை கொண்ட ஒரு நட்சத்திரம், தனது அணுக்கரு இணைவுக்கான ஹைட்ரஜன் எரிபொருளை முழுமையாக இழந்த பிறகு எஞ்சியிருக்கும் பகுதியே வெள்ளை குள்ள நட்சத்திரமாகும்.

எரிபொருள் குறையும்போது நட்சத்திரத்தின் மையப்பகுதி ஈர்ப்பு விசையால் சுருங்கி வெப்பமடைகிறது.

இதனால் வெளிப்புற ஹைட்ரஜன் அடுக்கு விரிவடைந்து சிவப்பு ராட்சத நட்சத்திரமாக மாறி, இறுதியில் வெளிப்புற அடுக்குகள் உதிர்ந்து மையப்பகுதி மட்டும் அடர்த்தியான வெள்ளை குள்ள நட்சத்திரமாக நிலைத்திருக்கும்.

'வெலோபோயாய்' அமைப்பு ஒரு காலத்தில் சூரியனை போன்ற இரண்டு பிரகாசமான நட்சத்திரங்களையும் ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தையும் கொண்டிருந்தது.

ADVERTISEMENT

ரகசியம்

மௌனா கியா தொலைநோக்கி மூலம் வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்

காலப்போக்கில் சூரியனைப் போன்ற இரண்டு நட்சத்திரங்களும் தங்கள் ஆயுளை முடித்து வெள்ளை குள்ள நட்சத்திரங்களாக மாறிவிட்ட நிலையில், குறைந்த நிறை கொண்ட சிவப்பு குள்ள நட்சத்திரம் மட்டும் தொடர்ந்து ஒளிர்ந்து வருகிறது.

சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றி புதிய கோள்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, வினாடிக்கு 16.09 கிலோமீட்டர் வேகத்தில் மிகப்பெரிய ஆர வேக சமிக்ஞைகளை உருவாக்கும் ஒரு விண்பொருளை ஸ்பைரூ கருவி கண்டறிந்தது.

இதனைத் தொடர்ந்து மௌனா கியாவில் உள்ள ஜெமினி நார்த் தொலைநோக்கியின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, அது ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம் என்பது உறுதியானது.

ADVERTISEMENT

நட்சத்திரப் பரிணாம கோட்பாடு

நட்சத்திரப் பரிணாம கோட்பாடுகளைச் சோதிக்கும் களம்

இந்த மூன்று நட்சத்திர அமைப்பில் உள்ள ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம், சிவப்பு குள்ள நட்சத்திரத்தை 129.3 வானியல் அலகுகள் தொலைவில் சுற்றி வர சுமார் 1,000 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

புதிதாக கண்டறியப்பட்ட மற்றொரு வெள்ளை குள்ள நட்சத்திரம், சிவப்பு குள்ள நட்சத்திரத்திலிருந்து 4.6 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது.

இந்த நெருக்கமான அமைப்பு நட்சத்திரங்களின் நிறையை மிகத் துல்லியமாக அளவிட வானியலாளர்களுக்கு உதவியுள்ளது.

இதன்படி, சிவப்பு குள்ள நட்சத்திரம் சூரியனின் நிறையில் 42 சதவீதமும், புதிய வெள்ளை குள்ள நட்சத்திரம் சூரியனின் நிறையில் 62 சதவீதமும் கொண்டுள்ளன.

ADVERTISEMENT