Loading...
27 நாட்கள் நீடித்த அண்டவெளியின் மெகா வெடிப்பு; பிரபஞ்ச வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்த GRB 220706A
பிரபஞ்ச வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்த GRB 220706A

27 நாட்கள் நீடித்த அண்டவெளியின் மெகா வெடிப்பு; பிரபஞ்ச வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்த GRB 220706A

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
05:57 pm

செய்தி முன்னோட்டம்

பிரபஞ்ச வரலாற்றிலேயே இதுவரை பதிவாகாத வகையில், மிக நீண்ட நேரம் நீடித்த பிரம்மாண்ட காமா கதிர் வெடிப்பை (GRB) இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2022 ஜூலை 6 அன்று முதன்முதலில் கண்டறியப்பட்ட GRB 220706A என்ற இந்த விண்வெளி வெடிப்பின் மையப் பகுதி சுமார் 27 நாட்கள் தொடர்ந்து இயங்கி, முந்தைய சாதனைகளை முற்றிலும் முறியடித்துள்ளது. பொதுவாக அண்டவெளியில் நிகழும் காமா கதிர் வெடிப்புகள் சில வினாடிகள் முதல் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், இந்த GRB 220706A வெடிப்பானது இதற்கு முன் பதிவான மிக நீண்ட வெடிப்பை விட 20 நாட்கள் அதிகமாக இயங்கியுள்ளது.

புதிய சாதனை

27 நாட்கள் நீடித்த புதிய சாதனை

வழக்கமாக பெருவெடிப்புக்குப்பின் உருவாகும் எக்ஸ்-ரே ஜுவாலைகள் முதல் சில நாட்களிலேயே மறைந்துவிடும். ஆனால், இதில் 27 நாட்களுக்குப் பிறகும் தீவிரமான எக்ஸ்-ரே கதிர்வீச்சு உருவானது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விண்மீன்கள் வெடித்துக் கருந்துளையாக மாறுவது அல்லது நியூட்ரான் விண்மீன்கள் ஒன்றோடொன்று மோதுவது மூலம் இவை உருவாகின்றன.

எனினும், இந்த அதி-நீண்ட கதிர் வெடிப்பிற்கான சரியான காரணம் இன்னும் புதிர் விலகாமல் உள்ளது.

கோட்பாடு

காந்த நட்சத்திரக் கோட்பாடு

இந்த அபூர்வ வெடிப்புக்கு 'மேக்னடார்' எனப்படும் மிக அதிக காந்தப்புலம் கொண்ட நியூட்ரான் விண்மீன் காரணமாக இருக்கலாம் எனப் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் பெஞ்சமின் கோம்பர்ட்ஸ் தலைமையிலான ஆய்வுக் குழு கணித்துள்ளது.

அல்லது இறக்கும் தருவாயில் இருந்த தாய் விண்மீன் உமிழ்ந்த அடர்ந்த விண்வெளிப் பொருட்களின் மீது காமா கதிர் வீச்சுகள் மோதியதால் இந்த பிரகாசமும் நீடித்த வெடிப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

வரும் காலங்களில் ஐன்ஸ்டீன் புரோப் போன்ற அதிநவீன எக்ஸ்-ரே விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் இது போன்ற அதி-நீண்ட காமா கதிர் வெடிப்புகளைக் கண்டறிந்து, அவற்றின் பின்னால் உள்ள மகத்தான ஆற்றல் மூலங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT