Page Loader
உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. அனுபவத்தைப் பகிர்ந்த ஸ்மார்ட்வாட்ச் பயனர்!
பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. அனுபவத்தைப் பகிர்ந்த ஸ்மார்ட்வாட்ச் பயனர்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 09, 2023
03:50 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் சரியான நேரத்தில் வழிகாட்டி அல்லது செயல்பட்டு தங்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறது எனப் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். தற்போது ரெட்டிட் தளத்தில் அப்படியான ஒரு சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறார் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் பயனர் ஒருவர். ப்ளோரிடாவில் ஓட்டல் ஒன்றில் பணி நிமித்தமாகத் தங்கியிருந்திருக்கிறார் ஸ்மார்ட்வாட்ச் பயனர் ஒருவர். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே தன்னுடைய நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அவருடைய நண்பர் ஓட்டல் அறைக்கு சென்று பார்க்கும் போது தரையில் விழுந்து கிடந்திருக்கிறார் இவர். ஆனால், பாதிக்கப்பட்டவருடைய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சானது உடனடியாக அதனைக் கண்காணித்து அவசர அழைப்பு எண்ணுக்கு தகவல் அனுப்பியிருக்கிறது. சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, நீண்ட போராட்டத்திற்கு பின்பு காப்பாற்றப்பட்டிருக்கிறார் ஸ்மார்ட்வாட்ச் பயனர்.

ஆப்பிள் தயாரிப்புகள்

எப்படிச் சாத்தியம்? 

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சில் Fall Detection என்ற வசதி இருக்கிறது. ஒரு வேளை ஸ்மார்ட்வாட்ச் அணிந்திருப்பவர் கீழே விழுந்தால் அதனைக் கணிக்கும் வசதி இது. பயனர் கீழே விழுவதைக் கணிக்கும் ஸ்மார்ட்வாட்ச், ஒரு நிமிடத்திற்கு பயனர் எந்த அசைவும் இன்றி இருந்தால் பின்னர் 30 நொடிகளுக்கு தொடர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும். பயனர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் எழுந்து ஸ்மார்ட்வாட்ச்சில் எச்சரிக்கை ஒலியை அணைத்துவிடலாம். அப்படி அவர்கள் பிரச்சினையில் இருந்து எழவில்லை என்றால் உடனே அவசர உதவி எண்கள் மற்றும் அவசர தொடர்பு எண்களுக்கு தகவல் தெரிவிக்கும். ஆனால், ஆப்பிள் வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது.