
M3 சிப்செட்டைக் கொண்ட புதிய 'மேக்' மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
கடந்த மாதம் நடைபெற்று முடந்த ஆப்பிள் WWDC மாநாட்டில், தங்களது கடந்த ஆண்டு M2 சிப்பைக் கொண்ட 15-இன்ச் மேக்புக் ஏரை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.
அதனைத் தொடர்ந்து, தற்போது உருவாக்கத்தில் இருக்கும் M3 சிப்பைக் கொண்ட புதிய மேக் சாதனங்களை இந்த ஆண்டு அக்டோபரில் அந்நிறுவனம் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தங்களுடைய புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் மற்றும் புதிய ஆப்பிள் வாட்சை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் புதிய ஆப்பிள் மேக் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
ஆப்பிள்
M3 சிப்செட் கொண்ட மேக் சாதனங்கள்:
தற்போது ஆப்பிளின் மேக் சாதனங்களில் பயன்படுத்தப்பட்ட M2 சீரிஸ் சிப்செட்டானது 5-nm ப்ராசஸைக் கொண்டிருக்கும் நிலையில், புதிய M3 சிப்செட்டானது 3-nm ப்ராசஸில் உருவாக்கப்பட்டு வருகிறது.
அக்டோபரில், இந்த M3 சிப்செட்டைக் கொண்ட புதிய ஐமேக், 13-இன்ச் மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ ஆகிய சாதனங்களை ஆப்பிள் வெளியிடவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடப்ந்து அடுத்த வருடம், புதிய M3 சிப்பைக் கொண்ட 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அடுத்த ஆண்டு M3 சிப்பைக் கொண்ட ஐபேடு ப்ரோ ஒன்றும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.