ரூ.9 லட்சம் விலை கொண்ட ஆப்பிள் மேக் ப்ரோ.. என்ன ஸ்பெஷல்?
ஆப்பிள் நிறுவனம், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மேக் ப்ரோ மாடலை WWDC 2023 நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது. தங்களது அனைத்து சாதனங்களிலும் இன்டெல் ப்ராசஸர்களை மாற்றி தங்களுடைய சிப்களைப் பயன்படுத்த திட்டமிட்டது ஆப்பிள். தற்போது ஆப்பிள் சிப்பைக் கொண்ட மேக் ப்ரோவின் அறிமுகத்துடன் இன்டெல் ப்ராசஸர்களுக்கு விடை கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். WWDC நிகழ்வில் ஆப்பிளின் ஃப்ளாக்ஷிப் சிப்பான M2 அல்ட்ரா சிப்பைக் கொண்ட மேக் ப்ரோவை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். தற்போதைய நிலையில் மிகவும் பவர்ஃபுல்லான கணினி என்றால், அது ஆப்பிளின் இந்த புதிய மேக் ப்ரோ தான். எவ்வளவு கடினமான வேலையையும் இந்த கணினி எளிதாக கையாளும் என உறுதியளித்திருக்கிறது ஆப்பிள்.
புதிய மேக் ப்ரோவின் விலை?
2019-ல் இன்டெல் ப்ராசஸர் கொண்ட மேக் ப்ரோவை ரூ.5 லட்சம் விலையில் வெளியிட்டது ஆப்பிள். இந்த புதிய மேக் ப்ரோவை 'கொஞ்சம்' அதிகமாக ரூ.7.30 லட்சம் விலையில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த விலை பேஸ் மாடலான 24 கோர் CPU, 60 கோர் GPU, 32 கோர் நியூரல் இன்ஜின் மற்றும் 64GB யுனிஃபைடு மெமரி கொண்ட மாடலுக்கு மட்டுமே. 76 கோர் GPU மற்றும் 128GB யுனிஃபைடு மெமரி கொண்ட பூஸ்டட் வேரியன்ட்டிற்கு ரூ.9.10 லட்சம் விலை நிர்ணயம் செய்திருக்கிறது ஆப்பிள். M2 அல்ட்ரா சிப் வேண்டும், ஆனால் விலை அதிகம் என நினைப்பவர்கள் ரூ.4.20 லட்சம் விலையில் வெளியாகியிருக்கும் M2 அல்ட்ரா சிப்பைக் கொண்ட மேக் ஸ்டூடியோவை பரிசீலனை செய்யலாம்.