மாற்றுத் திறனுடையவர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்!
"அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பமே சிறந்த தொழில்நுட்பம் என ஆப்பிள் நம்புகிறோம். அந்த வகையில் அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக். அறிவாற்றல் மாற்றுத் திறன், பார்வை, கேட்டல் மற்றும் பேச்சு மாற்றுத் திறனுடையவர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய வசதிகளை தங்கள் ஐபோன் மற்றும் ஐபேடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். பேச்சு மாற்றுத் திறனுடைவர்களுக்கு லைவ் ஸ்பீச் வசதியை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். இதன் மூலம், போன் காலிலோ, ஃபேஸ்டைமிலோ அல்லது நேரிலேயே கூட நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச விரும்பும் விஷயங்களை டைப் செய்து மொபைல் மூலம் பேசலாம்.
பிற வசதிகள் என்னென்ன?
பேச்சுத் திறனை இழக்கும் அபாயத்தில் இருப்பவர்கள் தங்கள் குரலை ஐபோனில் பதிவு செய்து அதனைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். அறிவாற்றல் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு அசிஸ்டிவ் அக்சஸில் புதுமைகளைக் கொண்டுவந்திருக்கிறது ஆப்பிள். இதன் மூலம் வால்பேப்பர்கள், புகைப்படங்கள் எதுவும் இல்லாத மிகவும் எளிமையான லே-அவுட்டை தங்கள் சாதனங்களில் செட் செய்து கொள்ள முடியும். ஏற்கனவே இருக்கும் மேக்னிஃபயர் வசதியில் பாய்ண்ட் அண்டு ஸ்பீடு வசதியைச் பார்வை மாற்றத் திறனுடையவர்களுக்காக வழங்கியிருக்கிறது ஆப்பிள். நம் எதிரில், நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களை இந்த வசதியின் மூலம் எளிதாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.