சாட்ஜிபிடியை கூர்ந்து கவனித்து வருகிறேன்.. டிம் கும் சொன்னது என்ன?
சாட்ஜிபிடியை தான் பயன்படுத்துவதாக, அந்த சாட்பாட்டின் மீதான தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆப்பிள் சிஇஓ டிம் குக். சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்திருக்கிறார் அவர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்துக்களைத் தெரிவிக்கும் போது மிகவும் கவனமாக இருப்பார் டிம் குக். அவரே தற்போது சாட்ஜிபிடியினால் ஈர்க்கப்பட்டதாக கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு வெளியிட்ட அறிவிப்புக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது டிம் குக்கின் கருத்து. அதாவது, தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக சாட்ஜிபிடியை தங்கள் நிறுவன ஊழியர்கள் பயன்படுத்தக்கூடாது என ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிளின் AI தொழில்நுட்பம்:
சாட்ஜிபிடியை பயன்படுத்துவது மட்டுமல்லாது, அந்த தொழில்நுட்பத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் டிம் குக். மேலும், AI தொழில்நுட்பகளால் ஏற்படும் ஒருபக்க சார்பு மற்றும் பொய்யான தகவல்களை எதிர்கொள்ள விதிமுறைகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். சாட்ஜிபிடியை போலவே ஒரு சேவை மற்றும் தொழில்நுட்பத்தை ஆப்பிள் உருவாக்கி வருவதாகவும், அது குறித்த தகவல்களை பயனர்கள் தவறுதலாக சாட்ஜிபிடி உள்ளிட்ட சேவைகளில் பதிவிட வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதியே ஆப்பிள் ஊழியர்கள் பிற AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயமாக மென்பொருள் கோடிங்கை உருவாக்கும் மைக்ரோசாஃப்டின் கிட்ஹப் கோபைலட்டையும் தங்கள் ஊழியர்கள் பயன்படுத்த ஆப்பிள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.