LOADING...
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும்; அந்த்ரோபிக் சிஇஓ கணிப்பு
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும் என கணிப்பு

இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும்; அந்த்ரோபிக் சிஇஓ கணிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2025
06:47 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான அந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, ஒயிட் காலர் வேலைகளில் கணிசமான பகுதி ஏஐயால் அகற்றப்படலாம் என்று எச்சரித்துள்ளார். பிபிசி ரேடிகல் நேர்காணலில் அவர் பேசுகையில், சட்டம், ஆலோசனை, நிதி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் ஒரே விதமான பணிகளை, ஏஐ ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தானியங்கு முறையில் செய்துவிடும் என்று கணித்துள்ளார். சட்ட நிறுவனங்களில் ஆவணங்களை ஆய்வு செய்வது போன்ற வேலைகளை ஏஐ மிகச் சிறப்பாகச் செய்யும் என்று அமோடி சுட்டிக்காட்டினார். பல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக ஏஐயைப் பார்க்காமல், செலவுகளைக் குறைக்கும் வழியாகவே கருதுவதாக அவர் கூறினார்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பத் துறை

அமோடியின் கணிப்பு தொழில்நுட்பத் துறையிலும் எதிரொலித்துள்ளது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் 90% மென்பொருள் கோடிங்கை ஏஐ எழுதிவிடும் என்றும், ஒரு வருடத்திற்குள் அனைத்து மென்பொருள் கோடிங்களையும் ஏஐயால் எழுத முடியும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம், மனிதப் பொறியாளர்களின் பங்கு, உயர் மட்ட வடிவமைப்பு மற்றும் மேற்பார்வைக்கு மட்டுமே சுருங்கிவிடும் என்று அவர் கூறினார். என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் போன்ற சில தொழில்நுட்பத் தலைவர்கள், ஏஐ மனிதர்களின் வேலைகளை முழுமையாக நீக்காமல், அவற்றை மாற்றி அமைக்கும் என்று வாதிடுகின்றனர். எனினும், ஃபோர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் ஃபார்லே போன்றவர்கள் அமோடியின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.