'பிட்காயின் கொடுத்த மஹிந்திரா கார்களை வாங்க முடியுமா'.. பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா!
உலகின் விலைமதிப்புமிக்க கிரிப்டோகரன்ஸியாக பிட்காயின் இருந்து வருகிறது. இந்தியாவில் கிரிப்டோகரண்ஸிக்களை வாங்குவதும், வர்த்தகம் செய்வதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதில் வரும் லாபத்திற்கு வரிப்பிடித்தமும் செய்யப்படுகிறது. ஆனால், அது இந்தியாவில் ஒரு கட்டண முறையாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. கிரிப்டோகரண்ஸி பயன்பாட்டை இந்தியாவில் சட்டப்பூர்வாக்குவது குறித்து நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டரில், "பிட்காயின்களைக் கொடுத்து மஹிந்திரா கார்களை நாங்கள் வாங்க முடியுமா" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ள மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த மஹிந்திரா, "இப்போது முடியாது. ஆனால், வருங்காலத்தில் வாய்ப்பிருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனம் NFT-க்களை முதன் முறையாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.