ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா தளங்களில் பயனர்களின் புகார்.. மெட்டாவின் மாதாந்திர அறிக்கை!
இந்தியாவில் மெட்டாவின் சமூக வலைத்தள நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் எழுப்பிய புகார்களின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதில் ஃபேஸ்புக்கில் பயனர்கள் பதிவு செய்த புகார்களில் 45% புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஃபேஸ்புக்கில், தங்கள் சமூக வலைத்தளக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக 8% புகார்களும், மோசமான உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதாக 22% புகார்களும், தங்களுக்கு தொல்லை கொடுப்பதாக 23% புகார்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட 7,193 புகார்களில், 1,903 புகார்களுக்கு பயனர்களே சரிசெய்வதற்கு தேவையான கருவியை வழங்கியதாகவும், மற்ற புகார்களில் ஆராய்ந்து தேவைக்கேற்ப 1,300 புகார்களின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இன்ஸ்டாகிராம் புகார்கள்:
இன்ஸ்டாவில் பயனர்களின் புகார்களில் 64% புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இன்ஸ்டாகிராமில் 9,226 புகார்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் 5,936 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் பெறப்பட்ட 4,280 புகார்களில் பயனர்களே சரிசெய்யும் வகையில் தேவையான கருவிகளை வழங்கியாதக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் புகார்கள் தவிர்த்து அந்த நிறுவனங்களே மதிப்பாய்வு செய்து ஃபேஸ்புக்கில் 36 மில்லியன் உள்ளடக்கங்களின் மீதும், இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் உள்ளடக்கங்களின் மீதும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.