விளையாடும் வயதில் இப்படியொரு சாதனையா! 8 வயதில் தொடங்கி 12 வயதில் அணு உலையை உருவாக்கி சிறுவன் சாதனை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஏய்டன் மெக்மில்லன், தனது வீட்டில் உள்ள விளையாட்டு அறையிலேயே வெற்றிகரமாக ஒரு அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சுமார் நான்கு ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள ஏய்டன், அணுக்கரு இணைவை நிகழ்த்திய உலகின் மிக இளைய நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைக்க முயற்சி செய்து வருகிறார்.
தேடல்
8 வயதில் தொடங்கிய தேடல்
ஏய்டனின் இந்த ஆர்வம் அவர் 8 வயதாக இருக்கும்போதே தொடங்கியது. தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகள் அணு இயற்பியல் குறித்த கோட்பாடுகளை ஆழ்ந்து படிப்பதிலேயே அவர் செலவிட்டார். அதன் பிறகு, மேற்கு டல்லாஸில் உள்ள 'லாஞ்ச்பேடு' என்ற லாப நோக்கற்ற அமைப்பின் உதவியுடன் தனது இயந்திரத்தை உருவாக்கும் பணிகளைத் தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது தாயார் இந்தத் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்தாலும், ஏய்டனின் தெளிவான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு சோதனைகளைக் கண்டு பின்னர் அனுமதி அளித்துள்ளார்.
வெற்றி
வெற்றியை உறுதி செய்த நியூட்ரான்கள்
நான்கு ஆண்டுகள் நீடித்த இந்தத் திட்டத்தில் பல பின்னடைவுகளும் ஏமாற்றங்களும் இருந்தன. இறுதியாக, அவர் உருவாக்கிய இயந்திரம் நியூட்ரான்களை வெளிப்படுத்தியபோது, அணுக்கரு இணைவு வெற்றிகரமாக நடந்துள்ளது என்பது உறுதியானது. "இந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது; நீண்ட பயணத்தின் வெற்றிகரமான முடிவு இது" என்று ஏய்டன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை செய்வதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் நுணுக்கங்களை மிகவும் பொறுமையுடன் அவர் கையாண்டுள்ளார்.
கனவு
எதிர்கால ஆற்றல் குறித்த கனவு
வெறும் புகழுக்காகவோ அல்லது சாதனையை முறியடிக்கவோ மட்டும் ஏய்டன் இதைச் செய்யவில்லை. எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அணுக்கரு இணைவு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையாலேயே இதில் ஈடுபட்டதாக அவர் கூறுகிறார். தற்போதைய ஏழாம் வகுப்பு மாணவரான ஏய்டன் மெக்மில்லன், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் துறையில் தனது பயணத்தைத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.