காற்று மாசுபாட்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்; நிபுணர்கள் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் முன்பு குளிர்காலம் என்பது பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலமாக இருந்தது. ஆனால், தற்போது காற்று மாசுபாட்டின் காரணமாக, அது கவலைக்குரிய காலமாக மாறியுள்ளது. தொடர்ந்து நீடிக்கும் தலைவலி, சோர்வு, எரிச்சல் மற்றும் இரவில் தூக்கமின்மை ஆகியவை சளி அல்லது கண் எரிச்சலுடன் மட்டும் நின்றுவிடாமல், நச்சுக்காற்றின் கண்ணுக்குத் தெரியாத எடை மூளையைத் தாக்கி, மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிப்பு
மூளையில் வெளியே தெரியாமல் ஏற்படும் பாதிப்புகள்
சுகாதார நிபுணர்கள் கருத்துப்படி, PM2.5 போன்ற மிக நுண்ணிய மாசு துகள்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து, மூளைத் தடையைக் கடந்து, மூளையில் வீக்கத்தைத் (Neuroinflammation) தூண்டுகின்றன. ஃபிரன்டியர்ஸ் இன் நியூரோசயின்ஸ் அறிக்கையின்படி, தொடர்ந்து நச்சுக்காற்றை சுவாசிப்பது கவனம், தூக்கம் மற்றும் மனநிலையை கட்டுப்படுத்தும் பகுதிகளில் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூளை தொடர்ந்து தற்காப்பு நிலையில் இருந்து, ஓய்வு எடுக்க முடியாமல் போகிறது.
மன அழுத்தம்
அதிகரிக்கும் மன அழுத்தம்
மாசுபட்ட காற்று உடலின் மன அழுத்த அமைப்பை (HPA-axis) செயல்படுத்துவதால், கார்டிசோல் ஹார்மோன் அளவு நீண்ட நேரம் உயர்ந்து காணப்படுகிறது. இது நாள்பட்ட மன அழுத்த நிலையை உருவாக்கி, பதட்டம், எரிச்சல், கவனம் குறைதல் மற்றும் தூக்கச் சுழற்சி சீர்குலைவு ஆகியவற்றுக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிப்பு
அதிகம் பாதிக்கப்படுவோர் யார்?
மாசுபாட்டால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் மற்றும் வெளியில் வேலை செய்வோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் குறைவான கவனம் மற்றும் நடத்தை மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்; முதியோரிடையே அறிவாற்றல் குறைபாடு அதிகரிக்கிறது. மாசுபாடு கொள்கையில் மனநலத்தையும் ஒரு பகுதியாகச் சேர்க்க வேண்டும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் சுத்தமான காற்று மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். N95 முககவசங்களை அணிவது, வீட்டில் காற்றைச் சுத்தமாக வைத்திருப்பது, சரியான தூக்க அட்டவணையைப் பின்பற்றுவது போன்ற சிறிய பழக்கவழக்கங்கள் மனதைப் பாதுகாக்க உதவும்.