மூக்கு முடிகளை ஏன் அகற்றக் கூடாது? குறிப்பாக குளிர்காலத்தில்! அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
மூக்கில் உள்ள முடிகளை அகற்றக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை வெறும் முடிகள் மட்டுமல்ல, அவை நமது சுவாச மண்டலத்தின் முதலாவதுப் பாதுகாப்புக் கவசமாக செயல்படுகின்றன. குறிப்பாகக் குளிர்காலத்தில், இந்த முடிகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது. மூக்கு மற்றும் அதனுள் உள்ள சிறிய இரத்த நாளங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவை என்பதால், அங்குள்ள முடிகளை வேக்ஸிங் (Waxing) செய்வது அல்லதுப் பிடுங்குவது (Tweezing/Plucking) மிகவும் அபாயகரமானதாகும் என்று காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆரோக்கியம்
மூக்கு முடிகள் நமது ஆரோக்கியத்திற்கு உதவுவது எப்படி?
மூக்கு முடிகள் ஒரு இயற்கையான வடிகட்டியாகச் செயல்படுகின்றன. இவை, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள தூசித் துகள்கள், மகரந்தம் போன்ற ஒவ்வாமைப் பொருட்கள் மற்றும் நோய்க்கிருமிகள் (Pathogens) சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்னரே அவற்றைப் பிடித்துத் தடுக்கின்றன. இந்த அத்தியாவசியப் பாதுகாப்புத் தடையை நீக்கும் போது, தொற்றுநோய்களுக்கான அபாயம் அதிகரிக்கிறது. மேலும், குளிர்காலத்தில் காற்று வறண்டு இருக்கும்போது, மூக்கு முடிகள் நமது நாசிப் பாதையில் தேவையான ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. இது சுவாசம் எளிதாக நடைபெறவும், நாசிப் பாதையில் வறட்சி ஏற்பட்டுச் சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் உதவுகிறது. வலுவான வாசனை அல்லது சிறு பூச்சிகள் போன்ற வெளிப்புறத் தூண்டுதல்களிலிருந்து நமது சுவாசப் பாதையைப் பாதுகாக்கும் ஒரு எச்சரிக்கை அமைப்பாகவும் மூக்கு முடிகள் செயல்படுகின்றன.
அபாயம்
அகற்றுவதால் ஏற்படும் அபாயங்கள்
மூக்கு முடிகளை வேக்ஸிங் அல்லதுப் பிடுங்குதல் மூலம் முழுவதுமாக நீக்கும்போது, பாதுகாப்பு வடிகட்டி நீக்கப்படுவதுடன், நாசித் திசுக்களும் பாதிக்கப்படுகின்றன. பிடுங்கும் போது ஏற்படும் சிறிய காயங்கள் அல்லது நுண் கிழிசல்கள் (Microtears) வழியாகப் பாக்டீரியாக்கள் எளிதாகத் திசுக்களில் நுழைந்து, நாசிச் சீழ் (Nasal Abscess) அல்லது நாசிச் செல்லுலைடிஸ் (Nasal cellulitis) போன்ற கடுமையான தொற்றுகளை ஏற்படுத்தலாம். மேலும், நாசிப் பாதையில் உள்ளச் சில நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் மூளை மற்றும் கண்களுடன் தொடர்பு கொண்டுள்ளன.
ட்ரிம்
ட்ரிம் செய்யலாமா?
எனவே, அரிதான சமயங்களில், இந்தக் காயங்கள் காவெர்னஸ் சைனஸ் த்ரோம்போசிஸ் (Cavernous sinus thrombosis) போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிரமானப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அழகியல் காரணமாக முழுவதுமாக அகற்ற விரும்புவதற்குப் பதிலாக, ஆபத்தைத் தவிர்க்க, முடிகளின் நீளத்தைக் குறைக்க மட்டும் ட்ரிம்மர்களைப் (Trimmers) பயன்படுத்துவதே பாதுகாப்பான வழி என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.