பயன்படுத்திய தேயிலை இலைகளை தூக்கி எறிய வேண்டாம். இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்
டீ அல்லது தேநீர் என்பது நம்மில் பலருக்கு ஒரு பிடித்தமான பானமாகும். அதிகாலை பலருக்கும் புலருவதே சூடான தேநீரில் தான். தேநீர், உடலுக்கு பல நன்மைகளை தருகிறது அதே நேரத்தில், தேநீரில் பல வகைகளும் உண்டு. நம்மில் பலரும், தேயிலைகளை, டீ போட்டதும், தூக்கி எரிந்து விடுவோம். ஆனால், பயன்படுத்திய தேயிலைகளில் கூட பல நன்மைகளும் பயனும் மறைந்து இருக்கிறது. அதை பல்வேறு வகைகளில் மறுசுழற்சி செய்துகொள்ளலாம். எப்படி என்பதை விளக்குகிறோம், வாருங்கள்!
டியோடரைசராக பயன்படுத்தவும்
உங்கள் வீட்டில் உள்ள காற்றை புத்துணர்ச்சியாக்க, தேயிலை இலைகளை பயன்படுத்தலாம். மூன்று அல்லது நான்கு சிறிய, சுத்தமான துண்டுகளை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் தேயிலை இலைகளுடன் நிரப்பவும். இப்போது அதில் மூன்று துளிகள் எலுமிச்சை சாறு, உங்களுக்கு பிடித்தமான எசென்ஷியல் ஆயில் சேர்த்து முடிச்சுப் போடவும். வீட்டின் மூலைகளில் இந்த டியோடரைசர் துணி முடிச்சுகளை வைக்கவும். குறிப்பாக, துர்நாற்றம் வீசும் இடங்களில் வைக்கவும். வீடே நறுமணம் வீசும் அதிசயத்தை உணருவீர்கள்.
தோல் மற்றும் முடி பராமரிப்பு
நன்றாக பொடி செய்யப்பட்ட உலர்ந்த தேயிலை இலைகள், உங்கள் தினசரி குளியலுக்கு சிறந்த ஸ்க்ரப்-ஆக பயன்படும். அதேபோல, ஃபேஸ் மாஸ்க் போல வீட்டிலேயே தயாரிக்கலாம். பொடி செய்யப்பட்ட தேயிலை இலைகளை, தேன் அல்லது தயிருடன் கலக்கவும். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய தேயிலை இலைகளையும் பயன்படுத்தலாம். தேயிலை இலை பொடியை, தயிருடன் கலந்து முடிக்கு தேய்ப்பதால், உங்கள் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். ஷாம்பு செய்த பிறகு, குளிர்ந்த தேநீரை உங்கள் தலைமுடியில் ஊற்றி, சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இதுவும் முடியை பொலிவாக மாற்றும்
தோட்டத்திற்கு உரம் தயாரிக்க
தேயிலை இலைகள், உங்கள் வீட்டு தோட்டங்களுக்கு சிறந்த உரமாகும். உங்கள் செடிகளுக்கு கூடுதல் நைட்ரஜனை வழங்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவவும். நீங்கள் தூக்கி எரியவிருக்கும் தேயிலை இலைகளை, செடியின் அடிப்பகுதியைச் சுற்றி மண்ணில் தூவிவிடலாம். ஆனால், அது பால் கலக்கதாக தேயிலை மண்டியாக இருக்க வேண்டும். தேயிலை இலைகள், உலர்ந்த இலைகள் மற்றும் மக்கும் காய்கறி குப்பைகளை ஒரு தொட்டியில் போட்டு, வீட்டிலேயே சத்தான உர கலவையை உருவாக்கலாம்.
சமையல் பாத்திரங்களை துலக்க
உங்கள் வீட்டு சமையல் பாத்திரங்கள் மற்றும் பிற மேற்பரப்புகளை சுத்தம் செய்யும் போது தேயிலை இலைகள் ஒரு ஸ்க்ரபாக பயன்படுகிறது. இது மேற்பரப்பில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு, கறை மற்றும் பாக்டீரியாவை சுத்தம் செய்ய உதவுகிறது. இதற்கு, ஒரு டீஸ்பூன் தேயிலை இலைகளுடன் ஒரு கப் தண்ணீரை சூடாக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். நீங்கள் சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன், இந்த டீ டிகாஷனுடன், ஒரு டீஸ்பூன் பாத்திரங்களைக் கழுவும் லிக்விட் சேர்த்து துலக்கினால், பளிச்சென்று மாறிவிடும்