ஒரே கார்ட், 5 உணவகங்கள்! ஸ்விக்கியின் புதிய மல்டி-ரெஸ்டாரண்ட் ஆர்டர் வசதி! வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
பிரபல உணவு விநியோக செயலியான ஸ்விக்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள மல்டி-ரெஸ்டாரண்ட் ஆர்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 வெவ்வேறு உணவகங்களில் இருந்து தங்களுக்கு விருப்பமான உணவுகளைத் தேர்வு செய்து, ஒரே முறையில் கட்டணம் செலுத்தி ஆர்டர் செய்ய முடியும். அக்டோபர் 15, 2026 முதல் அறிமுகமாகியுள்ள இந்த அம்சம், நாடு முழுவதும் 720-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சிறப்பம்சம்
குழுக்களுக்கும் குடும்பங்களுக்கும் ஏற்ற சிறப்பம்சம்
நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து உணவு ஆர்டர் செய்யும்போது, ஆளுக்கொரு உணவகம் அல்லது வெவ்வேறு உணவு வகைகளை விரும்புவது வழக்கம்.
இந்த சிக்கலுக்குத் தீர்வாக ஸ்விக்கியின் இப்புதிய வசதி அமைந்துள்ளது.
இதன் மூலம் ஒரே ஆர்டரில் ஒரு உணவகத்தில் இருந்து ஸ்டார்டர்கள், மற்றொரு உணவகத்தில் இருந்து மெயின் கோர்ஸ் மற்றும் வேறொரு உணவகத்தில் இருந்து இனிப்பு வகைகளைத் தேர்வு செய்து ஒரே பரிவர்த்தனையில் பெற்றுக்கொள்ள முடியும்.
டெலிவரி மற்றும் கண்காணிப்பு
தனித்தனி டெலிவரி மற்றும் ஒரே திரையில் கண்காணிப்பு
வெவ்வேறு உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்யப்படும் உணவுகள் தனித்தனியாகவே தயாரிக்கப்பட்டு டெலிவரி பார்ட்னர்களால் கொண்டு வரப்படும்.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்களது அனைத்து ஆர்டர்களின் நிலையையும் வெவ்வேறு பயன்பாடுகளுக்கு செல்லாமல், ஸ்விக்கியின் ஒரே பகிர்வுத் திரையில் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
பயனர்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்கள் குறித்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
சேமிப்பு
கட்டணக் குறைப்பும் பயனர் சேமிப்பும்
ஸ்விக்கி நடத்திய ஆய்வில், 55% பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு உணவகங்களின் கார்டுகளை உருவாக்குவதும், 20% பேர் முதல் ஆர்டர் செய்த 30 நிமிடங்களுக்குள் இரண்டாவது ஆர்டரை செய்வதும் தெரியவந்துள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் தனித்தனியாகக் செக்-அவுட் செய்து செலுத்தும் தளக் கட்டணங்களை குறைக்க முடியும்.
ஸ்விக்கி உணவுச் சந்தையின் முதன்மை வணிக அதிகாரி சித்தார்த் பாகூ, "வாடிக்கையாளர்களின் மாறுபட்ட உணவு விருப்பங்களை எளிமைப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம்" எனக் கூறியுள்ளார்.