Loading...
8 மணி நேரம் தூங்கியும் அசதியா இருக்கா? உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கலாம்; மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
8 மணி நேரம் தூங்கினாலும் சோர்வாக இருப்பதற்கான காரணங்கள்

8 மணி நேரம் தூங்கியும் அசதியா இருக்கா? உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கலாம்; மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 27, 2026
12:35 pm

செய்தி முன்னோட்டம்

இரவு முழுவதும் 8 மணி நேரம் தூங்கிய பிறகும், காலையில் எழும்போது எழுந்திருக்கவே முடியாமல் உடற்சோர்வுடன் உணர்கிறீர்களா? தூங்கும் நேர அளவை விட, தூக்கத்தின் தரமே நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்க மிகவும் முக்கியமானது என மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல் நடு இரவில் அடிக்கடி விழிப்பு வருவது அல்லது தூக்கம் தடைபடுவது போன்ற காரணங்களால் தான் இத்தகைய கடுமையான அசதி ஏற்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

காரணம்

தூக்கமின்மைக்குக் காரணமான மருத்துவக் கோளாறுகள்

ஸ்லீப் அப்னியா எனப்படும் குறட்டை மற்றும் மூச்சுத் திணறல் கோளாறு, தூக்கத்தை அறியாமலேயே பாதிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும், மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வு போன்றவை உடலை எப்போதும் விழிப்பு நிலையிலேயே வைத்திருந்து ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுக்கின்றன.

அதேபோல, உடலில் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி குறைபாடு அல்லது தைராய்டு பிரச்சனைகள் இருந்தாலும், 8 மணி நேர தூக்கத்திற்குப் பிறகும் உடலில் தொடர் சோர்வு நீடிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தவிர்க்க வேண்டியவை

இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்

இரவில் செல்போன், டேப்லெட் போன்ற திரைகளைப் பார்ப்பது மெலடோனின் ஹார்மோன் சுரப்பைப் பாதித்துத் தூக்கத்தின் தரத்தைக் குறைக்கும்.

மேலும், மாலையில் காஃபின், மது அல்லது சிகரெட் போன்ற பழக்கங்கள் ஆரம்பத்தில் தூக்கத்தை வரவழைத்தாலும், இரவின் பிற்பகுதியில் தூக்கத்தைக் கலைத்துவிடும்.

முறையற்ற உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் சீரற்ற தூக்க நேரம் போன்ற வாழ்க்கை முறை தவறுகளும் காலையில் ஏற்படும் சோர்வுக்கு முதன்மையான காரணங்களாக அமைகின்றன என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

மருத்துவ ஆலோசனை

தூக்கத்தின் தரத்தை உயர்த்த மருத்துவர்களின் ஆலோசனைகள்

நல்ல தரமான தூக்கத்தைப் பெற அமைதியான, வெளிச்சமற்ற மற்றும் சரியான வெப்பநிலையைக் கொண்ட அறையை உருவாக்க வேண்டும்.

இரவு 8 மணிக்கு மேல் செல்போன் திரைகளைப் பார்ப்பதையும், மாலையில் டீ, காபி அல்லது மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

இந்த வாழ்க்கை முறை மாற்றங்களை செய்த பிறகும் பல வாரங்களாகத் தொடர் சோர்வு, அதிகப்படியான குறட்டை மற்றும் ஞாபக மறதி இருந்தால், தாமதிக்காமல் தகுந்த மருத்துவ வல்லுநர்களை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.

ADVERTISEMENT