
இதையெல்லாம் நம்பாதீங்க; இளம் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகள்
செய்தி முன்னோட்டம்
மார்பகப் புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்றவர்களுக்கு (மெனோபாஸ்) மட்டுமே வரும் என்ற ஆபத்தான கட்டுக்கதை, இளம் பெண்களிடையே அதிகரித்து வரும் நோயறிதல் விகிதங்களால் தகர்க்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள பெண்கள் ஆரம்பக்கால எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்வதால், அவர்களுக்கு பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்பட்ட நிலைகளில் நோய் கண்டறியப்படுகிறது. அதிகரித்து வரும் மன அழுத்தம், உடல் பருமன் மற்றும் மோசமான பழக்கவழக்கங்கள் (புகைபிடித்தல், மது அருந்துதல்) போன்ற வாழ்க்கை முறை காரணிகள் இந்தப் போக்குக்குக் காரணமாகின்றன. தாமதமான நோயறிதலை எதிர்த்துப் போராட, இளம் பெண்கள் மத்தியில் உள்ள பொதுவான தவறான கருத்துகளைக் கைவிட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
குடும்பம்
குடும்பத்தினருக்கு இல்லையென்றால் வராதா?
குடும்பத்தில் யாருக்கும் மார்பகப் புற்றுநோய் வராமல் இருந்தால், நமக்கும் வராது என்ற கட்டுக்கதை மிகப்பெரியது. ஆனால், உண்மையில் 70-75% பாதிப்புகள் எந்த மரபணுக் தொடர்பும் இல்லாத பெண்களுக்கே ஏற்படுகின்றன. வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள், பரம்பரையை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல், கட்டிகள் இல்லாவிட்டால் ஆபத்தில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. இது தவறானது. ஏனெனில், மார்பகப் புற்றுநோய் முலைக்காம்பு திரவம் வெளியேறுதல், தோல் குழி விழுதல் அல்லது தொடர்ச்சியான வலி போன்ற நுட்பமான அறிகுறிகள் மூலம் வெளிப்படலாம். மேலும், பெண்களுக்கு மட்டுமே இந்த நோய் வரும் என்ற நம்பிக்கை தவறானது. ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும். 1% க்கும் குறைவான அளவில் இது உள்ளது.
மேமோகிராம்
மேமோகிராம் பரிசோதனை பாதிப்பை ஏற்படுத்துமா?
இளம் பெண்களிடையே உள்ள பொதுவான அச்சம் என்னவென்றால், மேமோகிராம் பரிசோதனையே புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதுதான். ஆனால், மருத்துவர்கள் இதை முற்றிலும் தவறு என்று கூறுகின்றனர். மேமோகிராம்களில் கதிர்வீச்சு அளவு மிகக் குறைவாகவே உள்ளது, மேலும் ஆரம்பத்திலேயே கண்டறிவதன் நன்மைகள் அதைவிட மிக அதிகம். இறுதியாக, தாய்ப்பால் கொடுப்பது வாழ்நாள் ஆபத்தைக் குறைக்கும் என்றாலும், அது ஒரு பெண்ணுக்கு முழுமையான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்காது. எனவே, இளம் தலைமுறையினர் தங்கள் ஆரோக்கியத்திற்குக் கட்டாயம் முக்கியத்துவம் கொடுத்து, வழக்கமான சுயப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.