LOADING...
தாமதிப்பது சோம்பேறித்தனம் அல்ல, உணர்ச்சித் துயரத்தின் அறிகுறியா? உளவியலாளர் விளக்கம்
தாமதிப்பது சோம்பேறித்தனம் அல்ல, உணர்ச்சித் துயரத்தின் அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

தாமதிப்பது சோம்பேறித்தனம் அல்ல, உணர்ச்சித் துயரத்தின் அறிகுறியா? உளவியலாளர் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2025
08:33 pm

செய்தி முன்னோட்டம்

குறிப்பிட்ட வேலையைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போடும் பழக்கம் (Procrastination) பெரும்பாலும் சோம்பேறித்தனம் அல்லது நேர மேலாண்மைக் குறைபாடு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், இது ஆழ்ந்த உணர்ச்சித் துயரம் (Emotional Distress) அல்லது உங்கள் மனம் உதவிக்காகக் கேட்கும் ஒரு சத்தம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு வேலையைத் தள்ளிப் போடுவதால் ஏற்படும் தற்காலிக நிம்மதி, மன அழுத்தத்தையும் குற்ற உணர்ச்சியையும் அதிகரித்து, ஒரு தீய சுழற்சியில் சிக்க வைக்கிறது என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தவறு நேர்ந்து விடுமோ என்ற பயம், உடனடி நிறைவுத்தன்மையை விரும்புவது (Perfectionism) மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்ற உணர்ச்சிசார்ந்த காரணிகளே தாமதத்திற்குப் பின்னால் உள்ள முக்கியத் தூண்டுதல்களாகும்.

மனநலம்

மனநலப் பிரச்சினைகளின் அறிகுறி

தாமதிக்கும்போது, போதிய நேரம் இல்லை என்று சொல்லித் தோல்வியிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது சோர்வு மற்றும் உணர்ச்சிப் பக்கவாதம் போன்ற உணர்ச்சிகளால் தூண்டப்படும்போது, அது பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்ற அடிப்படை மனநலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து காலக்கெடுவைத் தவற விடுவது, உடலில் கார்டிசோல் அளவை அதிகரித்து, நாள்பட்ட மன அழுத்தத்திற்கு (Chronic Stress) வழிவகுக்கிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் தூக்கத்தைப் பாதிக்கிறது. இந்தப் பழக்கத்தைக் கடக்க, வெறும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, பயம், அவமானம் மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்ற உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதே முக்கியமாகும்.

முன்னேற்றம்

ஐந்து நிமிட விதி

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தச் சுழற்சியை உடைக்க, ஒரு பெரிய வேலையைச் சிறிய பகுதிகளாகப் பிரித்து, முதலில் ஐந்து நிமிட விதியைப் பயன்படுத்திச் செயல்பட ஆரம்பிக்கலாம். அத்துடன், உங்களைப் பழிப்பதற்குப் பதிலாக, தன்னிரக்கத்துடன் செயல்படுவது இந்தச் சுழற்சியை உடைத்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.