சதய விழா 2024: கல்கியின் பொன்னியின் செல்வன் நிஜமா?புனைவா? ஒரு அலசல்
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், 1950 மற்றும் 1954 க்கு இடைப்பட்ட காலத்தில் ராமசாமி 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி எழுதிய அற்புத படைப்பாகும். 1941ல் கல்கி என்ற வார இதழைத் தொடங்கிய கிருஷ்ணமூர்த்தி, அந்த இதழில்தான் 1950 அக்டோபர் 29 முதல் 1954 மே 16 வரை பொன்னியின் செல்வனின் கதையை அத்தியாயம் வாரியாக வெளியிட்டார். இதனை படமாக எடுக்க பலர் முயற்சித்த போதும், பல ஆண்டு ப்ரயத்தனங்களுக்கு பின்னர், இயக்குனர் மணிரத்னம் அதை திரைக்கு கொண்டு வந்தார். நாவல் படித்தவர்களுக்கு அதில் எந்த கதாபாத்திரம் நிஜம் என்றும் எந்த கதாபாத்திரம் புனைவு என்பதும் புலப்பட்டிருக்கும். அறியாதவர்களுக்காக இந்த கட்டுரை.
பொன்னியின் செல்வன் கதையின் களம் என்ன?
பொன்னியின் செல்வன் கிபி 10ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சோழ சாம்ராஜ்யத்தை நடந்த வாரிசுப் போரைச் சுற்றி வருகிறது. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பராந்தக சோழன் II ஆட்சியின் இறுதி காலத்தில் நடைபெற்ற ஒரு வாரிசு போரினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்த கதை. ஒரு பக்கத்தில், பராந்தக சோழன், அதாவது சுந்தர சோழனின் மூன்று குழந்தைகள் - இளவரசர் ஆதித்ய கரிகாலன் (942-971 CE), இளவரசர் அருள்மொழி வர்மன் (947-1014 CE) மற்றும் அவர்களது சகோதரி இளவரசி குந்தவை. மறுபுறம் சோழ அரசின் போற்றுதலுக்குரிய ராணி செம்பியன் மகாதேவியின் மகனான உத்தம சோழன் (கி.பி. 980-985) இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. சோழ அரசவையில் இருந்த நிலப்பிரபுக்களால் ஆதரவு பெற்றவர் உத்தம சோழர்.
மற்றுமொரு வரலாற்று நிகழ்வு- பாண்டியனின் தலைக்கொன்ற கோப்பரகேசரி
பொன்னியின் செல்வனின் கதை சுழலும் மற்றொரு வரலாற்று நிகழ்வு கி.பி 966 இல் நடந்த சேவூர் போரில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனால் பாண்டிய மன்னன் வீரநாராயண பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதாகும். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் காணப்படும் பல சமகால சோழர்கால கல்வெட்டுகள் ஆதித்த கரிகாலனை 'வீரபாண்டியன் தலை கொண்ட கோபரகேசரி வர்மன் கரிகாலன்' - 'வீரபாண்டியனின் தலையை வெட்டிய கரிகாலன்' என்று பெருமையுடன் போற்றுகின்றன. இந்த நிகழ்வை தொடர்ந்து, முடிசூட்டு இளவரசனாக இருந்த கரிகாலனை பாண்டிய ஆபத்துதவிகள் சதி செய்தி கொலை செய்ததாகவும் வரலாற்று தகவல்கள் உள்ளன.
கதையில் ஆதிக்கம் செலுத்தும் ஏனைய நிஜ கதாபாத்திரங்கள்
வல்லவரையன் வந்தியத்தேவன்: வாணர் குலத்தின் (பாணர் பழங்குடியினர்) ஒரு போர்வீரனாக அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் நிஜ வாழ்க்கையில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பண்டைய மன்னர்களின் வரிசையில் இருந்தவர் மற்றும் பெரும்பாணப்பாடி என்று அழைக்கப்பட்டார். இவர் சோழர்களின் படைத்தளபதியாக இருந்தார் எனவும், சோழ இளவரசி குந்தவையை மணந்தவர் எனவும் வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் திரைப்படத்தில் வருவது போல, அவர் சோழ சாம்ராஜ்ஜியத்தின் பல இன்னல்களில் ஹீரோவாக செயல்பட்டாரா என்பது தெரியவில்லை. குந்தவை: சோழ பேரரசின் அசைக்கமுடியாத சக்தியை குந்தவை நாச்சியார் திகழ்ந்துள்ளார். அதோடு அவர் சைவ சமய வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததும் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.
புனைவு கதாபாத்திரங்கள்
நந்தினி, பூங்குழலி, சேந்தன் அமுதன், ஆழ்வார்க்கடியான் நம்பி அல்லது திருமலையப்பன், மற்றும் மந்தாகினி தேவி ஆகிய பிரபலமான கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கல்கியால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதாபாத்திரங்கள் ஆகும். எனினும் பாண்டிய ஆபத்துதவிகள் சோழ சாம்ராஜ்யத்தில் ஊடுருவியது வரலாறு. ஏனைய கதாபாத்திரங்களான செம்பியன் மாதேவி, சம்புவராயர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் வாழ்ந்தது உண்மை, எனினும் அவர்கள் சோழ பேரரசில் அரசியல் திட்டமிடுபவர்களாக அறியப்படவில்லை.