Wakefit போட்டியில் தூங்கி ₹9.6 லட்சம் வென்ற மும்பை பெண்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
மும்பையை சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி என்ற பெண், தொடர்ந்து தூங்கும் விசித்திரமான போட்டியில் வெற்றி பெற்று ₹9.6 லட்சம் ரொக்கப் பரிசையும் இலவச சுற்றுலா பயணத்தையும் பெற்றுள்ளார். பிரபல மெத்தை மற்றும் தூக்கப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான வேக்ஃபிட் (Wakefit) நடத்திய ஸ்லீப் இன்டர்ன்ஷிப் போட்டியில் ஒன்பது போட்டியாளர்களை வீழ்த்தி அவர் இந்த பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். நாடு முழுவதிலுமிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், 10 நபர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியின் விதிகள்
60 நாட்கள் நடைபெற்ற சவாலான தூக்கப் போட்டியின் விதிகள்
போட்டியில் கலந்துகொண்ட நபர்கள் தொடர்ந்து 60 நாட்களுக்கு தங்களது வீடுகளிலேயே சரியான நேரத்தில் தூங்கி தினமும் 9 மணி நேர தூக்கப் பராமரிப்பை பேண வேண்டும்.
இதற்காக போட்டியாளர்களுக்கு பிரத்யேக மெத்தைகள் மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் சாதனங்களை (Sleep trackers) வேக்ஃபிட் நிறுவனம் வழங்கியிருந்தது.
அவைகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட தூக்கத் தரம் மற்றும் சீரான தூக்கப் புள்ளிகளின் (Sleep scores) அடிப்படையிலேயே போட்டியாளர்களின் தரவரிசைப் பட்டியல் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு இறுதி வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.
விசித்திரப் பணிகள்
போட்டியாளர்களை மகிழ்வித்த சுவாரஸ்யமான விசித்திரப் பணிகள்
வெறும் தூக்கம் மட்டுமின்றி, போட்டியாளர்களுக்கு வாரம் தோறும் ஸ்லீப் சினிமா மற்றும் ஸ்லீப் பிங்கோ போன்ற பல சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சவால்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் சாதாரண உரையாடலின் போது யாருக்கும் சந்தேகமின்றி தலையணை அல்லது போர்வை என்ற சொற்களை 10 முறை பயன்படுத்தும் அண்டர்கவர் ஸ்லீப் மிஷன் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு பிரா ஸ்லீப்பர் ஆஃப் தி வீக் என்ற வாராந்திர பட்டங்களும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.
அடுத்தகட்டம்
வேக்ஃபிட் இன்டர்ன்ஷிப் போட்டியின் வெற்றியும் அடுத்த கட்டமும்
60 நாட்கள் கடினமான போட்டிகளுக்குப் பிறகு ஜினியா சாட்டர்ஜி முதலிடம் பிடித்து இந்தியாவின் ஸ்லீப் சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த புதுமையான திட்டம் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தற்சமயம் ஐந்தாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆறாவது சீசனில் கலந்துகொள்வதற்கான முன்பதிவுகளையும் வேக்ஃபிட் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்சமயம் தொடங்கியுள்ளது.