கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு
ரோடோமைன்-பி இரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாயை விற்பனை செய்ய கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. பஞ்சுமிட்டாய் மற்றும் 'கோபி மஞ்சூரியன்' ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ரோடமைன்-பிக்கு கர்நாடக சுகாதாரத் துறை இன்று தடை விதித்தது. ரோடமைன்-பி என்பது உணவுக்கு தூக்கலான வண்ணத்தை கொடுக்கும் ஒரு இரசாயனமாகும். ரோடமைன்-பி மற்றும் அந்த இரசாயனம் கலந்த உணவு பொருட்களுக்கு எதிராக ஏற்கனவே சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதை கர்நாடகா தடை செய்துள்ளது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி சாயம் கலந்த பஞ்சுமிட்டாய் மற்றும் வண்ணக் கலவையுடன் கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு கடந்த மாதம் தடை விதித்தது.
தென் மாநிலங்களில் ரோடோமைன்-பி ரசாயனத்திற்கு தடை
அந்த இரசாயனம் புற்றுநோயை உண்டாக்க வல்லது என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, பஞ்சு மிட்டாய் விற்பனை சமீபத்தில் புதுச்சேரியில் தடை செய்யப்பட்டது. சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களிலும் ரோடமைன்-பி ரசாயனம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது பஞ்சுமிட்டாய் மற்றும் 'கோபி மஞ்சூரியன்' ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ரோடமைன்-பிக்கு கர்நாடக சுகாதாரத் துறை இன்று தடை விதித்தது.