போராட்டக் களம் இனி கலைக்கூடம்; டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியா பையனேல் 2026 விழா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஜந்தர் மந்தர் வளாகம், இந்தியா பையனேல் 2026 (India Biennale 2026) சர்வதேச கலை மற்றும் கட்டிடக்கலை விழாவின் முக்கியக் காட்சி மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் போராட்டங்கள் நடத்தும் இடப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்தத் தளம், தற்பொழுது கலாச்சார நிகழ்வுகளுக்கான மையமாக மாற்றப்பட்டு வருகிறது. வரும் 2026 டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் இம்மாபெரும் கலை விழா 2027 மார்ச் 21 வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
தத் த்வம் அசி
'தத் த்வம் அசி' கருப்பொருளில் உருவாகும் கலைக் காட்சிகள்
இந்த ஆண்டிற்கான பையனேல் விழாவானது உபநிடதத் தத்துவமான 'தத் த்வம் அசி' (Tat Tvam Asi) என்பதை மையக்கருத்தாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் செங்கோட்டையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் பதிப்பைத் தொடர்ந்து, இம்முறை மிக விரிவான முறையில் டெல்லி முழுவதும் உள்ள பல பாரம்பரிய சின்னங்களில் இந்த கண்காட்சி பரப்பப்படவுள்ளது.
புராணா கிலாவில் பீகார் அருங்காட்சியகக் கண்காட்சியும், குதுப் மினாரில் பரேஷ் மைட்டி மற்றும் ரிது பெரி தயாரித்த வாரணாசி பாரம்பரியக் கலைப்படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
டெல்லி
டெல்லியின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்கள் ஒருங்கிணைப்பு
இந்தியா பையனேல் விழாவிற்காக டெல்லியின் முதன்மையான வரலாற்று இடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
புராணா கிலா, செங்கோட்டை, குதுப் மினார், அக்ரசென் கி பாவ்லி, ஹுமாயூன் அக்பர் கல்லறை, சஃப்தர்ஜங் கல்லறை, இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் லோதி கார்டன் உள்ளிட்ட பல இடங்களில் நேரடிக் கலைப் படைப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜந்தர் மந்தர் பெயர் விரைவில் சேர்க்கப்படும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வானியல் மையம்
வானியல் மையத்தில் இருந்து போராட்டக் களமாக மாறிய ஜந்தர் மந்தர்
1724 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் மன்னர் இரண்டாம் ஜெய் சிங்கால் முகலாய பேரரசர் முகம்மது ஷா காலத்தில் இந்த வானியல் ஆய்வு மையம் கட்டப்பட்டது.
பிரம்மாண்டக் கல் கருவிகள் மற்றும் சூரியக் கடிகாரம் மூலம் கோள்களின் நகர்வுகளைக் துல்லியமாகக் கணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்திருந்ததால், காலப்போக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் முதன்மை போராட்டக் களமாக இது மாறியது குறிப்பிடத்தக்கது.