காய்கறிகளைக் கழுவினால் மட்டும் போதாது! சைக்ளோஸ்போரா ஒட்டுண்ணி குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் சைக்ளோஸ்போரா கயேடனென்சிஸ் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் ஏற்படும் சைக்ளோஸ்போரியாசிஸ் வயிற்றுப்போக்கு நோய் பரவி 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களில் பரிமாறப்பட்ட லெட்டூஸ் கீரைகள் மூலமே இது பரவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களை வெறும் தண்ணீரில் கழுவுவது மட்டுமே இந்த நோய்த்தொற்றைத் தடுக்கப் போதுமானதா என்பது குறித்து PSRI மருத்துவமனையின் மூத்த இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் விளக்கியுள்ளார்.
கீரைகளின் கட்டமைப்பு அபாயம்
சைக்ளோஸ்போரியாசிஸ் எவ்வாறு பரவுகிறது?
சைக்ளோஸ்போரியாசிஸ் என்பது தூய்மையற்ற தண்ணீர் அல்லது சுகாதாரமற்ற சூழல் காரணமாகக் காய்கறிகளில் ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணியால் ஏற்படும் குடல் தொற்றாகும்.
விவசாயம், நீர்ப்பாசனம், அறுவடை மற்றும் பேக்கிங் செய்யப்படும் போது இந்த ஒட்டுண்ணி பயிர்களில் பரவுகிறது.
லெட்டூஸ், கொத்தமல்லி, துளசி மற்றும் பெர்ரி போன்ற சமைக்காமல் பச்சையாக உண்ணப்படும் உணவுகள் மூலமாகவே மனித உடலுக்குள் இது எளிதாகச் சென்று விடுகிறது.
லெட்டூஸ் போன்ற கீரைகளில் பல அடுக்குகளும் மடிப்புகளும் இருப்பதால் நுண்ணிய ஒட்டுண்ணிகள் அதில் எளிதில் ஒட்டிக்கொள்கின்றன.
குறிப்பாக, நறுக்கப்பட்ட கீரைகளை பேக் செய்யும்போது பல பண்ணைகளின் காய்கறிகள் ஒன்றாகச் சேர்க்கப்படுவதால், ஏதேனும் ஒரு இடத்தில் தொற்று இருந்தாலும் அது அனைத்துக் கீரைகளுக்கும் பரவி விடுகிறது.
தண்ணீரில் கழுவுவது மட்டும் பாதுகாப்பா?
என்னென்ன அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும்?
ஓடும் தண்ணீரில் காய்கறிகளைக் கழுவுவது மேலோட்டமான அழுக்குகளையும் சில கிருமிகளையும் நீக்குமே தவிர, சைக்ளோஸ்போரா ஒட்டுண்ணியை முற்றிலும் நீக்க முடியாது.
இந்த ஒட்டுண்ணி மிகவும் சிறியது என்பதால் கீரைகளின் மடிப்புகளில் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும். எனவே தண்ணீரில் கழுவுவது ஒரு முதற்கட்டப் பாதுகாப்பே தவிர, அதுவே முழுமையான தீர்வாகாது.
சாதாரண உணவு நச்சுத்தன்மை போல அல்லாமல், இத்தொற்றினால் ஏற்படும் நீராவதியான தொடர் வயிற்றுப்போக்கு பல நாட்கள் அல்லது வாரக் கணக்கில் நீடிக்கக்கூடும்.
மேலும் வயிற்றுப் பிடிப்பு, வயிற்று உப்பசம், குமட்டல், பசியின்மை, அதிகப்படியான சோர்வு, லேசான காய்ச்சல் மற்றும் உடல் எடை குறைதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
பாதுகாப்பு முறைகள்
பாதிப்பிலிருந்து தப்பிக்கும் வழிகள் என்ன?
காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதற்கு முன் ஓடும் நன்னீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.
உணவைக் கையாளுவதற்கு முன் கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
சீக்கிரம் கெட்டுப்போகும் உணவுகளை உடனடியாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத் துறையின் அறிவிப்புகளைக் கவனிக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு உணவுப் பொருளால் நோய் பரவுகிறது என அரசு அடையாளப்படுத்தினால், அந்த உணவைப் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் தவிர்க்க வேண்டும்.