காதலர் தின வாரம்: ஹக் டேயின் வரலாறும், முக்கியத்துவமும்
ஆண்டுதோறும், பிப்ரவரி 2-வது வாரம் முழுக்க, காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர் வாரமாக கருதப்படும் அந்த வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை (பிப்.12 ) ஹக் டேவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதலர்கள் மட்டுமல்ல, உங்கள் மனதிற்கு நெருக்கமான, பிரியமான உறவுகள் அனைவரிடமும் உங்கள் அன்பை, கட்டிப்பிடித்து வெளிப்படுத்தலாம். முதற்கட்டமாக, நம்மையும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட நம்மைச் சுற்றியுள்ளவர்களையும், நேசிக்கக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.
அரவணைப்பதன் முக்கியத்துவம்
ஒருவரை கட்டி அரவணைப்பதன் மூலம் பல நற்பயன்கள் உடலுக்கும், மனதிற்கும் நிகழ்கிறது என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உறவு பலப்படுகிறது. ஆண்டுதோறும், ஹக் டே, பிப்ரவரி-12 அன்று கொண்டாடப்படுகிறது. அரவணைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த, இந்த நாளை கொண்டாட தொடங்கி இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் நிலவி வந்த இந்த பழக்கம், நாளடைவில், இந்தியாவிலும் பரவியது. அரவணைப்பதால், ஒருவருக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருப்பதை குறிப்பால் உணர்த்தலாம். நீண்ட அரவணைப்பினால், உங்களது மூளை, ஆக்ஸிடாசினை வெளியிடுகிறது. இது மனமகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும். இதனால் நீங்களும், உங்கள் மனதிற்கு பிரியமனவரும், மகிழ்ச்சியுடன் நாளை தொடரலாம்.