சர்க்கரைவள்ளிக் கிழங்கை இப்படி சாப்பிட்டா தான் முழு சத்தும் கிடைக்கும்! வேகவைப்பதா அல்லது வறுப்பதா?
செய்தி முன்னோட்டம்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததும்கூட. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாகக் குளிர்காலங்களில் இதைச் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. இருப்பினும், நீங்கள் அதைச் சமைக்கும் முறை அதன் சத்துக்களை மாற்றக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சமைத்தல்
வேகவைப்பதா அல்லது வறுப்பதா? (Boiled vs Roasted)
சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சமைக்கப் பல வழிகள் இருந்தாலும், ஊட்டச்சத்து நிபுணர்கள் வேகவைத்து (Boiled) சாப்பிடுவதே சிறந்தது என்று கூறுகின்றனர். ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: கிழங்கை வேகவைக்கும்போது, அதில் உள்ள சில சர்க்கரை மூலக்கூறுகள் தண்ணீரில் கரைந்துவிடும். இது அதன் 'கிளைசெமிக் குறியீட்டை' (Glycemic Index) குறைக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயராமல் சீராக இருக்கும். செரிமானம்: வேகவைத்த கிழங்கு செரிமானத்திற்கு மிகவும் எளிதானது மற்றும் வயிற்றிற்கு இதமானது. வறுப்பதன் விளைவு: எண்ணெயிட்டு வறுப்பது (Roasted) கிழங்கிற்குச் சுவையைத் தந்தாலும், அது சர்க்கரை அளவைச் சற்று அதிகரிக்கக்கூடும். ஆனால், ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
செரிமானம்
செரிமானத்தை மேம்படுத்த ஒரு ரகசிய டிப்ஸ்
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்த பிறகு, அதைச் சற்று ஆறவைத்து (Cooling) சாப்பிடுவது அதிக பலனைத் தரும். கிழங்கு ஆறும்போது அதில் 'ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச்' (Resistant Starch) என்ற ஒரு வகை நார்ச்சத்து உருவாகிறது. இது செரிமானத்தை மெதுவாக்கி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும், இது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கவும் பெரிதும் உதவுகிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலில் அதிகப்படியான நார்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் ஒளிந்துள்ளன. எனவே, சமைப்பதற்கு முன்னால் கிழங்கை நன்றாகக் கழுவிவிட்டு, தோலுடன் வேகவைத்துச் சாப்பிடுவதுதான் மிகச்சிறந்த முறை. இது உங்கள் உடலுக்குக் கூடுதல் சத்துக்களை வழங்கும்.