இனி ஆன்லைனில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கும் எக்ஸ்பைரி டேட் பாக்கலாம்! செப்டம்பர் 30க்குள் அமல்படுத்த FSSAI உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், செப்டோ மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் மற்றும் குவிக் காமர்ஸ் தளம் வழியாக பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆன்லைனில் பட்டியலிடப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து விவரங்கள் அடங்கிய லேபிள்கள் மற்றும் காலாவதி தேதிகளை பயனர்கள் வாங்குவதற்கு முன்பே தெளிவாகத் திரையில் காண்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் 30, 2026 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் நலன்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை
இது குறித்து பேசிய FSSAI தலைமை செயல் அதிகாரி ரஜித் புன்ஹானி, ஆன்லைனில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயாரிப்புகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
நேரடி கடைகளில் வாங்குவது போலவே, ஆன்லைனிலும் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அதன் தயாரிப்பு விவரங்கள் மற்றும் பயன்பாட்டுக் காலாவதி தேதியை தெளிவாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆன்லைன் வணிகம்
ஆன்லைன் வணிக நிறுவனங்களின் பொறுப்புக்கூறல்
உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆன்லைன் வணிகத் தளங்கள் தங்களை வெறும் இடைத்தரகர்கள் அல்லது தகவல்களைத் திரட்டும் தளங்கள் எனக் கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது என்றும் ரஜித் புன்ஹானி தெளிவுபடுத்தியுள்ளார்.
தங்களது செயலிகளில் விற்கப்படும் மற்றும் பட்டியலிடப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் தரத்திற்கும், அதில் குறிப்பிடப்படும் தகவல்களின் உண்மைத்தன்மைக்கும் அந்தந்த ஆன்லைன் நிறுவனங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அபராதம்
கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அபராதம்
உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகக் கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 33,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபராதமாக FSSAI வசூலித்துள்ளது.
பண அபராதம் குறைவாக இருப்பதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், சிறு தொகை அபராதமாகக் விதிக்கப்பட்டாலும் அது அந்நிறுவனத்தின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மூலம் சட்ட அமலாக்கம் திறம்பட செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.